கீழ்குடியில் 15ம் நூற்றாண்டு கல் வட்டங்கள் கண்டுபிடிப்பு
திருச்சுழி: திருச்சுழி அருகே கீழ்குடி கிராமத்தில் பெரும் கற்காலம் முதல் 15-16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வட்டங்கள், கற்குவியல்கள், முதுமக்கள் தாழி பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட கோவை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர் சுரேஷ் குருசாமி கூறுகையில், : கீழ்குடி பகுதியில் 15-16 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வட்டங்கள், கற்குவியல்கள், முதுமக்கள் தாழி பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அனைத்தும் அக்கால மக்களின் வாழ்வியல் மற்றும் இறந்தவர்களை அடக்க செய்யும் ஈமச்சடங்கு குறித்த மரபுகளை அறிந்து கொள்ள உதவும். இதே பகுதியில் இரும்பு உருக்கு உலைகளுடன் தொடர்புடைய தடயங்களும், இரும்புகளை உருக்கும் போது உருவாகும் கசடுகளும் அதிக அளவில் கிடைத்துள்ளன.
பழங்காலத்தில் இரும்பு உற்பத்தி அல்லது உலோக தொழில்நுட்பம் நடந்து இருக்கலாம் என தெரிகிறது. இது தவிர புதைந்து கிடந்த நிலையில் நடுக்கல் மற்றும் 5 சதி கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. சங்க காலத்தில் வீர மரபு நினைவு வழிபாடுகள் மற்றும் பெண்களின் வரலாற்றை அறிய உதவும். கீழ் குடி கிராமத்தில் வெவ்வேறு கால கட்டங்களை சேர்ந்த பல்வேறு தொல்லியல் சான்றுகள் அனைத்தும் ஒரே கிராமத்தில் கிடைத்துள்ளன.
இவை அனைத்தும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வெட்டியல் தொல்லியல் துறை பேராசிரியர்களின் மேற்பார்வையில் உறுதிப்படுத்தப்பட்டவை. இந்தப் பகுதியில் அகழாய்வு செய்தால் பல்வேறு வரலாற்று தடயங்கள் கிடைக்கும், என்று கூறினார்.