பழனி முருகன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
காஞ்சிபுரம்: கந்தசஷ்டி விழாவின் ஆறாவது நாளான நேற்று, காஞ்சிபுரம் பழனி முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழனி முருகன் கோவிலிலில் 17வது ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா கடந்த 9ம் தேதி வினைதீர்க்கும் விநாயகர் வீதியுலாவுடன் தொடங்கியது. இரண்டாள் நாள் உத்சவமான கடந்த 10ம் தேதி வீரவாகு காப்பு கட்டும் நிகழ்வும், மாலை தாருகா சூரன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், மூன்றாம் உத்சவமான கடந்த 11ம் தேதி மாலை சிங்கமுகா சூரன் வதமும் நடந்தது.
இதில், நான்காம் நாள் உத்சவமான கடந்த 12ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் முருகன் உலா வந்தார். தொடர்ந்து அக்னி முகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் யானை வாகனத்தில் முருகன் உலா வந்தார். தொடர்ந்து வஜ்ரவாகு வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.
இதில், ஆறாவது நாள் உத்சமான நேற்று, மூலவர் பழனி முருகனுகு சிறப்பு அபிஷேக அலங்காரமும் நடந்தது. உற்சவர் ஆறுமுக பெருமான் வெள்ளை சாமந்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 9:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலில் இருந்து, பம்பை, தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட மங்கல வாத்தியங்கள் இசைக்க, முருக பக்தர் சுரேஷ், தன் உடலில், 108 வேல் தரித்து முன்னே சென்றார். தொடர்ந்து, 108 பெண்கள் பால்குடம் ஏந்தியபடி, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக பழனி முருகன் கோவில் சென்றனர்.
தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை மயில் வாகனத்தில் முருகன் வீதியுலாவும், தொடர்ந்து பானுகோபன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.