சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியது: புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பு.. பக்தர்கள் குவிந்தனர்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகர விளக்கு புனித யாத்திரை இன்று தொடங்கியது.
இதையொட்டி, தற்போதைய மேல்சாந்தி ஈ.டி. பிரசாத் நம்பூதிரி கோயிலைத் திறந்து, தந்திரி கண்டரு பிரம்மதத்தன் முன்னிலையில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18 புனிதப் படிகளில் இறங்கி, ஆழியில் தீ மூட்டி, புதிதாக நியமிக்கப்பட்ட மேல்சாந்திகளை சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றார். புதிய சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட அரீக்கரா சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரிக்கு தந்திரி மாலை 6.30 மணியளவில் அபிஷேகச் சடங்குகளை நடத்துகிறார். நாளை நவம்பர் 17 அதிகாலை 3 மணி முதல் புதிய மேல்சாந்திகள் சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களைத் திறந்ததும், பக்தர்களுக்கான மண்டல கால யாத்திரை முறைப்படி தொடங்குகிறது. டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்று கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு கால வழிபாட்டிற்காக நடை திறக்கப்படும். ஜனவரி 14-ம் தேதி புகழ்பெற்ற மகரவிளக்கு திருவிழா நடைபெறுகிறது. ஜனவரி 19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜனவரி 20-ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் அனுமதி. ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.