உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் கடைமுழுக்கு தீர்த்தவாரி: போர்வெல் நீரில் பக்தர்கள் புனிதநீராடல்

மயிலாடுதுறையில் கடைமுழுக்கு தீர்த்தவாரி: போர்வெல் நீரில் பக்தர்கள் புனிதநீராடல்

மயிலாடுதுறை: பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையின் காரணமாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள், மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இதனால் காசிக்கு நிகராக இத்தலம் கருதப்படுகிறது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் துலா உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. மாதம் முழுவதும் தினமும் அஸ்திரதேவர் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தகம் கொடுக்கும். கடைசி 10 நாள் திருவிழாவின் போது சிவன் கோயில்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக் கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு கடந்த மாதம் 18ம் தேதி துலா மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவாக கடைமுழக்கு தீர்த்தவாரி உற்சவம் இன்று நடந்தது. காவிரி துலா கட்டத்தின் இருகரைகளிலும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்தநாயகி சமேத ஐய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் , தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா  சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தெற்குகரையிலும், தருமபரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் வடக்குகரையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி கொடுக்க 2 குருமகா சன்னிதானங்கள் உட்பட ஆயிரகணக்கான பக்தர்கள் போர்வெல் நீரில் புனிதநீராடினர். தொடர்ந்து இரண்டு கரைகளிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 


பின்னர் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில் பிரசித்திபெற்ற கடைமுழுக்கு தீர்த்தவாரிக்கு ஆண்டுதோறும் காவிரியில் பக்தர்கள் புனித நீராட தண்ணீர் கிடைப்பதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். காவிரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதும், புனித நீராட தண்ணீர் இல்லாதது மனவருத்தத்தை அளிக்கிறது என்றார்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !