உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டமிடல் இன்றி திணறும் பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி கோவிலில் தொடரும் அவலம்!

திட்டமிடல் இன்றி திணறும் பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி கோவிலில் தொடரும் அவலம்!

பல்லடம்: மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், உரிய திட்டமிடல் இன்றி நடத்தப்படும் விழாக்களால், பக்தர்கள், சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


பல்லடத்தை அடுத்த, மாதப்பூரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், சுற்றுவட்டார பகுதி மக்களின் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய விழாக்களின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். இவ்வாறு, கடந்த இரண்டு நாட்களில் நடந்த சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவற்றில், பல்லடமே திரண்டு வந்தது போல் பக்தர்கள் படையெடுத்து வந்தனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. இதனால், ஒவ்வொரு விழாக்களிலும், பக்தர்கள் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.


நேற்று முன்தினம் நடந்த சூரசம்ஹார‌ விழாவில், உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். விழாவில் அதிகப்படியான பெண்கள், தாய்மார்கள் பங்கேற்றிருந்த நிலையில், பாதுகாப்பு கேள்விக்குறியானது. பக்தர்கள் பலர் சூரசம்ஹார நிகழ்வை முறையாக கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க, கோவில் வளாகத்தில் உள்ள நான்கே நான்கு கழிப்பறையால், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். வழக்கம்போல் போதிய பார்க்கிங் வசதி இன்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதிய புறவழிச் சாலை ஆகியவை நிரம்பி வழிந்தன. இவ்வாறு, ஆண்டுதோறும் கோவிலில் நடக்கும் ஒவ்வொரு விழாக்களிலும், அடிப்படை வசதிகளுக்காக பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கோவிலில் பார்க்கிங் வசதியை விரிவுபடுத்த வேண்டும். குளியலறை வசதியுடன் புதிய கழிப்பிடங்கள் கட்ட வேண்டும். சாலை, குடிநீர், காத்திருக்கும் கூடம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !