உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் கூட்டம் அலைமோதும் ஒதியத்தூர் ஆறுபடையப்பன் கோவில்

பக்தர்கள் கூட்டம் அலைமோதும் ஒதியத்தூர் ஆறுபடையப்பன் கோவில்

கண்டாச்சிபுரம்: ஒதியத்தூர் ஆறுபடையப்பன் முருகன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 


கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூரில் உள்ள குன்றின் மீது கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆறுபடையப்பன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்குப் பிறகு செவ்வாய், வெள்ளி,ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக காலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக வாரம் தோறும் செவ்வாய்க் கிழமையன்று பக்தர்கள் கூட்டம் அதிகமானது. இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர். குறிப்பாக ஆறுபடையப்பன் சுவாமி தரிசனத்திற்காக சென்னை,விழுப்புரம், திருவண்ணாமலை,கடலூர்,புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பைக் மற்றும் கார்களில் வந்த வண்ணம் உள்ளனர். 


தரிசனத்திற்காக வந்த பல்வேறு மாவட்ட பக்தர்களிடம் இது குறித்து கேட்டபோது,கடந்த சில மாதங்களில் திருமணத்தடை மற்றும் குழந்தை பேறு ஆகிய வேண்டுதலுக்காக வந்து சென்ற பல பக்தர்களுக்கு அந்தப் பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இவை கோவிலுக்கு வந்து செல்லும் இளைஞர்கள் இன்ஸ்டா மற்றும் ரீல்ஸ்கள் மூலம் இக்கோவிலின் மகிமை குறித்து தெரிவிப்பதால்,வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திடீர் பக்தர்களின் வருகையால் ஒதியத்தூர் பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. மேலும் குன்றின் மேல் உள்ள ஆறுபடையப்பன் கோவிலில் பக்தர்கள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும்,சுவாமிகளை வழிபடுவதற்கும் பாதுகாப்பான வசதிகள் உள்ளதா என அரசு ஆராய வேண்டும் என்றும் பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். தொடர்ச்சியாக 6 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதாக இப்பகுதி கோயிலுக்கு வந்து பக்தர்கள் தெரிவித்தனர். பக்தர்களின் திடீர் வருகையால் தங்கள் ஊரில் உள்ள ஆறுபடையப்பன் கோவில் மிகுந்த புகழ் பெற்றுள்ளதாக இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !