காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு!
சென்னை: விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு, திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அகத்தியர் நாடி ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையின்படி, இக்கோவிலில் 27 முறை வலம் வந்து பெருமாளை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைப்பதுடன், குறிப்பாக திருமண பாக்கியமும் கைகூடும் என பக்தர்கள் நம்புகின்றனர். இதையடுத்து அதிகாலை முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கொடிமரம், பெருமாள் மற்றும் தாயார் சன்னதிகளைச் சுற்றி 27 முறை வலம் வந்து பக்தியுடன் வழிபட்டனர். தொடர்ந்து உற்சவர் பவளவண்ணப் பெருமாள் மற்றும் தாயாருக்கு பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பவளவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.