உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுருளி அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்: மாலை அணிந்த விரதம் துவக்கினர்

சுருளி அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்: மாலை அணிந்த விரதம் துவக்கினர்

கம்பம்: கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுருளி அருவியில் குளித்து இன்று ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் துவக்கினர்.


சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல பூஜைக்காக ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் சுருளி அருவிக்கு அதிகாலையில் பக்தர்கள் அதிகளவில் வந்தனர். அருவியில் குளித்து குருசாமியிடம் இங்குள்ள ஐயப்பன் கோயில் , பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று துளசி மாலை அணிந்து கொண்டனர். அதிகாலையில் சுருளி அருவி முழுவதும் சரண கோஷம் எதிரொலித்தது. வனத்துறையினர் அருவியில் வரிசையாக நின்று குளிக்க ஏற்பாடு செய்தனர்.


சின்னமனூர் : சின்னமனூர் ஐயப்பன் மணி மண்டபத்தில் ஐயப்பன் படத்திற்கு மாலைகள் அணிவித்து பஜனை நடந்தது. குருநாதர் லோகேந்திரராஜன், நூற்றுக்கணக்கானவர்களுக்கு துளசி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் படித்துறை, சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் படித்துறைகளிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர். வழக்கமாக செல்லும் பக்தர்கள் தாங்கள் வீடுகளில் பத்திரப் படுத்தி வைத்துள்ள துளசி மாலையை அணிந்தனர். புதிதாக மாலை போடும் கன்னி சாமிகள் கடைகளில் துளசி மாலை, காவி மற்றும் கறுப்பு நிற உடைகளை வாங்கி அணிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !