உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகம் முழுதும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்

தமிழகம் முழுதும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்

விழுப்புரம்

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து கொண்டு விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கமாகும். இந்த கார்த்திகை மாதம் நேற்று துவங்கியதை யொட்டி, விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே சக்தி விநாயகர் கோவிலில் உள்ள தர்மசாஸ்தா சன்னதியில் காலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடைபெற்றது.

பின், 6 மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பன் சிறப்பு மலர் அலங்கராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதே போல், விழுப்புரம் பி.என்., தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உட்பட பல்வேறு ஐயப்பன் கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

தமிழ் மாதமான கார்த்திகை பிறந்தது. முதல் நாளில் சபரிமலை ஐயப்ப சுவாமி காண செல்லும் பக்தர்கள் தங்கள் கடும் விரதத்தை துவக்கும் மாதம் இது. நேற்று முதல் நாள் என்பதால் அருகே உள்ள விநாயகர் கோயில், முருகர் கோயில், ஐயப்பர் கோயில்களில் பக்தர்கள் தங்கள் குருசாமிமார்களிடம் மாலை அணிந்தனர். இதையடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு சரணகோஷங்கள் எழுப்பப்பட்டன. நேற்று முதல் விரதத்தை துவக்கி மண்டல வழிபாட்டிற்கு ஒரு பக்தர்கள் தரப்பும், மகர ஜோதி காண ஒரு பக்தர்கள் தரப்பும் புறப்படும்.

விருதுநகரில் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பர் சன்னதி , விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும், விநாயகர் கோயில்களிலும் பக்தர்கள் மாலை அணிவித்துக் கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்துார்

மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் வளாகத்தில் ஐயப்பன் சன்னதியில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தங்கள் குருசாமி மூலம் மாலை அணிந்து ஐயப்பனை வழிபட்டனர். பின்னர் வைத்தியநாத சுவாமி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.இதனையடுத்து தினமும் மதியம் 12:00 மணிக்கு அன்னதானமும், மாலையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. வல்லபை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 4:15 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கணபதி ஹோமம், காலை 5:00 மணிக்கு அஸ்டாபிசேகம் மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன், சங்ககிரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை 1 முதல் தொடர்ந்து சபரிமலை யாத்திரை செல்லும் வரையிலும் 48 நாட்களும் தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயில் தலைமை குருசாமி மோகன் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கும் பள்ளி வேட்டை, பேட்டை துள்ளுதல் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். விரதம் கடைபிடிக்கும் ஐயப்ப பக்தர்கள் புகையிலை பழக்கம் உள்ளிட்ட போதை வஸ்துகளை தொடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளுடன் பாலித்தீன் பயன்பாடு இல்லாத விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

கருமத்தம்பட்டி
: ஓம் ஶ்ரீ ஐயப்பன் பீடத்தில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இதேபோல், காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

அன்னூர்: அன்னூர், தென்னம்பாளையம் ரோடு நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளான நேற்று காலை 5 மணிக்கு, அபிஷேக பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம்செய்தனர். காலை 6:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. நஞ்சுண்ட விநாயகருக்கு சிறப்ப பூஜையும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் வைபவமும் நடந்தது. ஒரே நாளில், 180 பேர் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். வரும் 48 நாட்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வழிபாடு நடக்கும்.


மதுரை:


அழகர்கோவில்: அழகர்கோவிலில் கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு முருகன், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் நேற்று அழகர்மலை உச்சியில் உள்ள நுாபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடி ராக்காயி அம்மனை தரிசித்தனர்.

பின்னர் முருகனின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதிகளிலும் தரிசனம் செய்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாதம் பிறப்பை முன்னிட்டு, மதுரையில் ஐயப்ப பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்துடன் விரதத்தை தொடங்கினர். அதிகாலை நீராடி, சரண கோஷம் முழங்கும் பக்தர்கள் கடும் விரதம் இருந்து சபரிமலை செல்ல தயாராகி வருகின்றனர். இந்த முறை கன்னிசாமிகளும் ஆர்வமாக ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ளனர்.

* மனம் உருகி வேண்டினால் கிடைக்கும்

மோகன்: நாங்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை ஏலத்தில் இழப்பது போல் தாயாருக்கு கனவு வந்தது. நாளை கார்த்திகை பிறப்பதற்கு முன் அபசகுனமாக கனவு வந்துள்ளதே என்று தாயார் கலங்கினார். அப்போது துாக்கத்தில் இருந்த நான், ஐயப்பனுக்கு மாலை போட்டால் வீடு கிடைத்து விடும் என்று பேசியிருக்கிறேன். அடுத்த நாளே குடும்பத்துடன் ஐயப்பனுக்கு விரதம் தொடங்கினோம். சில ஆண்டுகளில் வீடு விவகாரத்தில் வழக்கு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஐயப்பனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நடக்கும்.

* அதிசயம் நிகழ்த்திய ஐயப்பன்

சித்தையா: நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஐயப்பனை தரிசித்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். இளைய மகன் பிறவியிலேயே வாய் பேச முடியாதவன். அவனை 5 வயதில் சபரிமலைக்கு அழைத்துச்சென்று ஐயப்பனை தரிசித்தபோது, ‘ஐயப்பா...’ என்று முதல் வார்த்தை பேசினான். அந்த அதிசயத்தை யாராலும் நம்ப முடியவில்லை. ஒழுக்கம் மட்டுமே ஐயப்பனுக்கு நாம் செலுத்த வேண்டிய காணிக்கை. நம் வாழ்வின் உயர்வை அவன் பார்த்துக்கொள்வான்.

* உயிரைக் காத்த ஐயப்பன்

சோலைமலை: 1972 முதல் சபரிமலைக்கு சென்றுவருகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன் பெரிய பாதையில் சென்றபோது இரவில் தங்கினோம். அடுத்தநாள் பார்த்தபோது, சுற்றி தீப்பந்தங்கள் கிடந்தன. பின்னர் தான் தங்கியிருந்த இடத்திற்கு யானைக்கூட்டம் வந்ததால் தீப்பந்தம் காட்டி விரட்ட முயற்சித்தாக என்னுடன் வந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் ஒரு கட்டத்தில் விரட்டமுடியாமல் என்னை விட்டு ஓடியிருக்கின்றனர். இதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னிடம் வந்த யானைகள் எதுவும் செய்யாமல் சென்றுவிட்டன. இன்று நான் உயிரோடு இருப்பதற்கு ஐயப்பன் மட்டுமே காரணம்.

* நான் பிறக்க காரணம்


மணிகண்டன்: குழந்தை பாக்கியத்திற்காக என் பெற்றோர் போகாத கோயில் இல்லை. அப்பா மனதார வேண்டி ஐயப்பனுக்கு மாலை போட்டார். அவரது 46வது வயதில் ஐயப்பன் அருளால் நான் பிறக்க, எனக்கு ‘மணிகண்டன்’ என்று பெயர் சூட்டினர். என் 7வது வயதில் இருந்து சபரிமலைக்கு சென்று வருகிறேன். கரடுமுரடான மலையில் ஏற உடல், மன உறுதி தேவை. இதற்கு தயாராக சுய ஒழுக்கம், உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுடன் விரதமிருப்பது அவசியம். இவ்வாறு கூறினர்.


பொள்ளாச்சி

கார்த்திகை முதல் நாளில், ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து, மண்டல பூஜை மற்றும் மகரஜோதி கால விரதத்தை பக்தர்கள் துவங்குவது வழங்கம். பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 5:15 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை, 7:30 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் தீபாராதனை பூஜை நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி அருள்பாலித்தார். காலை, 9:30 மணிக்கு மேல், உற்சவ மூர்த்தியான ஐயப்ப சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் கோவிலில் உலா வந்து அருள்பாலித்தார். கார்த்திகை மாதத்தையொட்டி தினமும் காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5:15 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு நடைதிறப்பு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சபரிமலை யாத்திரைக்கு விரதமிருக்கும் பக்தர்கள், கோவில் வளாகத்தை சுற்றி வந்து, குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர். சரண கோஷம் பாடி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து, ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

வால்பாறை


சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில், கார்த்திகை முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து அபிஷேகம் பூஜையும் நடந்தன. அதன் பின், ஐயப்ப பக்தர்கள், குருசாமியிடம் மாலை அணிந்தனர். ஐயப்ப பக்தர்கள் வெள்ளிக்கவசத்தை கையில் ஏந்தி கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலிலும் நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் மாலை அணிந்தனர்.

புதுச்சேரி

குரு சித்தானந்த கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கருவடிக்குப்பம் குரு சித்தானந்த கோவிலில், கார்த்திகை மாதம் முதல் தேதியான நேற்று கோவிலில் சிறுவர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு குரு சாமிகள் மூலம் மாலை அணிந்து கொண்டு, தங்கள் 48 நாள் விரதத்தை துவங்கினர். அதே போன்று, புதுச்சேரி கோவிந்த சாலை பாரதி புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் அதிகாலையிலேயே மாலை அணிந்து தரிசனம் செய்தனர். முதலியார்பேட்டை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் மாலை அணிந்து நேற்று முதல் விரதத்தை துவங்கினர்.

கம்பம்

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுருளி அருவியில் குளித்து நேற்று ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் துவக்கினர். சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல பூஜைக்காக ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் சுருளி அருவிக்கு அதிகாலையில் பக்தர்கள் அதிகளவில் வந்தனர். அருவியில் குளித்து குருசாமியிடம் இங்குள்ள ஐயப்பன் கோயில் , பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று துளசி மாலை அணிந்து கொண்டனர். அதிகாலையில் சுருளி அருவி முழுவதும் சரண கோஷம் எதிரொலித்தது. வனத்துறையினர் அருவியில் வரிசையாக நின்று குளிக்க ஏற்பாடு செய்தனர்.

சின்னமனூர்: சின்னமனூர் ஐயப்பன் மணி மண்டபத்தில் ஐயப்பன் படத்திற்கு மாலைகள் அணிவித்து பஜனை நடந்தது. குருநாதர் லோகேந்திரராஜன், நூற்றுக்கணக்கானவர்களுக்கு துளசி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் படித்துறை, சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் படித்துறைகளிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர். வழக்கமாக செல்லும் பக்தர்கள் தாங்கள் வீடுகளில் பத்திரப் படுத்தி வைத்துள்ள துளசி மாலையை அணிந்தனர். புதிதாக மாலை போடும் கன்னி சாமிகள் கடைகளில் துளசி மாலை, காவி மற்றும் கறுப்பு நிற உடைகளை வாங்கி அணிந்தனர்.

திருப்பூர்

‘கார்த்திகை மாதம் மாலை அணிந்து… நேர்த்தியாகவே விரதம் இருந்து…’ என, எங்கு திரும்பினாலும், ஐயப்ப சுவாமியின் பக்தி பாடல்கள் ஒலிக்க துவங்கிவிட்டது. கார்த்திகை மாதம் துவங்கி, தை 1ம் தேதி வரை, ஐயப்ப சுவாமி வழிபாடு களைகட்டப்போகிறது. கார்த்திகை மாதம் 1ம் தேதியான நேற்று, சபரிமலை ஐயப்ப சுவாமி பக்தர்கள், அதிகாலையில் மாலை அணிந்து விரதம் துவங்கினர்… ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷத்துடன், சபரிமலை சீசன் துவங்கி விட்டது. திருப்பூர் ஐயப்பன் கோவில் உட்பட கோவில்களில், குருமார்கள் முன்னிலையில், பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில் மற்றும் விநாயகர் கோவில்களில், நேற்று ஏராளமான பக்தர்கள், சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கடந்த, 10ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை, கந்தசஷ்டி வழிபாடு களைகட்டியிருந்தது. சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் என, கோவில்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

திருப்பூரில் இருந்து, தினமும் இருமுடி கட்டி, சபரிமலை யாத்திரையும் துவங்கியுள்ளது. கார்த்திகை மாதப்பிறப்பு, ஆன்மிக ஊற்றெடுக்கும் நாளாக அமைந்திருந்தது. ஒரே நாளில், விஷ்ணுபதி புண்ணியகாலம், சோமவார பிரதோஷம், சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கியது என, மிக விசேஷமான நாளாக அமைந்திருந்ததாக, பக்தர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்


கார்த்திகை மாதம் முதல் நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து மண்டல விரதம் துவங்குவர். நேற்று ஐயப்ப பக்தர்கள் அதிகாலையே நீராடி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சபரிமலை ஐயப்பனை வேண்டி மண்டல பூஜைக்காக குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து முதல் விரதம் துவங்கினர்.திண்டுக்கல் மலையடிவாரம் ஐயப்ப சுவாமி கோயில், வெள்ளை விநாயகர் கோயில், இந்திரா நகர் ஐயப்ப சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் குவிந்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் கடைகளில் சபரிமலை சீசன் விற்பனை களைகட்டியது. பூஜை சாமான்கள் விற்பனை கடைகளில் துளசிமணி மாலை, சந்தன மாலை, ஐயப்ப டாலர், இருமுடி பை, கறுப்பு, நீலநிற வேட்டி, துண்டு விற்பனை அதிகம் நடந்தது. அண்ணா வணிக வளாகத்தில் செயல்படும் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.800, முல்லை ரூ.600, ஜாதி பூ ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.160, ரோஸ் ரூ.80 என விற்பனையானது.

சென்னை

கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து, 41 நாட்கள் விரதத்தை நேற்று தொடங்கினர். கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை போட்டு, விரத்தைத் தொடங்குவது வழக்கம். ஒரு மண்டலமான, 41 நாட்களுக்கு விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்குச் சென்று, அய்யப்பனை தரிசிப்பர். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து, சென்னை, புறநகரில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும், விநாயகர் கோவில்களிலும் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து, விரதத்தைத் தொடங்கினர்.

சென்னையில் மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், மடிப்பாக்கம், நங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். கார்த்திக்கை மாதத்தை முன்னிட்டு, அனைத்து அய்யப்பன் கோவில்களிலும் தினசரி பூஜை, விளக்கு பூஜை, லட்சார்ச்சனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்போரூர்: கார்த்திகை மாத பிறப்பினை திருப்போரூர் கோவில்களில் பக்தர்கள் அய்யப்ப சுவாமிக்கு மாலை அணிந்தனர். கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று, திருப்போரூர் கந்தசுவாமி கோவில், அய்யப்பன் கோவில், புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் அய்யப்ப சுவாமி மாலை அணிந்து, வழிபட்டனர்.

கந்தசுவாமி கோவிலில் செவ்வாய் தரிசனம்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்த பெருமானுக்கு செவ்வாய் கிழமை உகந்த நாள் என்பதாலும், கார்த்திகை மாத முதல் நாள் என்பதாலும் காலை முதலே பக்தர்கள் திரண்டனர். பின், ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி, கூட்டு வழிபாடு செய்தனர்.

மானாமதுரை:

சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி பகுதியில் கார்த்திகை பிறப்பான நேற்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக பக்தர்கள் ஆண்டு தோறும் கார்த்திகையில் மாலை அணிந்தும், விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவர். நேற்று கார்த்திகை பிறப்பை முன்னிட்டு மாவட்ட அளவில் அனைத்து விநாயகர், ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் தங்களது குருசாமி மூலம் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஐயப்பன் கோயில், சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயில்கள் என அனைத்து விநாயகர், ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

கோவை

சித்தாபுதூர் ஸ்ரீ அய்யப்பன் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி, பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். கார்த்திகை முதல் நாளான நேற்று மூலவர் அய்யப்ப சுவாமிக்கு பால், தயிர், நெய் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், வண்ண மலர் அலங்காரமும் நடந்தது. கோயில் கருவறைக்கு முன்பு கோயில் தந்திரிகள், அய்யப்ப பக்தர்கள், கன்னிசாமிகள் துளசி மாலை அணிந்து ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என சரண கோஷம் முழங்கி விரதத்தை துவங்கினர். கோயில் வளாகத்திலும் வெளியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அலைமோதியது.

கடலுார்

சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று கடலுார் மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தனர். பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி சுவாமியை வழிபட்டனர். இதே போன்று மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

உடுமலை

சபரிமலை மண்டல பூஜை, கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்குகிறது. குருசாமி துணையுடன், பக்தர்கள் மாலை அணிந்து, கடுமையான விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று, சுவாமியை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே, ஐயப்பனுக்கு மாலை அணிவதற்காக, கருப்பு, சிவப்பு என சுவாமிக்கு உகந்த நிறங்களில் வேஷ்டி, துண்டு எடுப்பதற்கும், துாய்மையான துளசியினால் ஆன மாலை வாங்கவும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கார்த்திகை முதல் நாளான நேற்று, உடுமலை ஐயப்பன் கோவில், கணியூர் ஐயப்பன் கோவில், எஸ்.வி., புரம் தத்வமஸி ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவில்களில், சிறப்பு யாக சாலை பூஜைகள் நடந்தன.

சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களில் அபிஷேகமும், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, குருசாமிகள், சபரி மலைக்கு மாலை அணிந்து, விரதம் துவக்கியவர்களுக்கு, துளசி மாலை அணிவித்தனர். அதே போல், உடுமலை சுற்றுப்புறங்களிலுள்ள, சிவாலயங்கள் மற்றும் விநாயகர் கோவில்கள் என நேற்று, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘சரணம் ஐயப்பா ’ கோஷம் முழங்க, சபரிமலை யாத்திரைக்காக ஐயப்பசுவாமிக்கு மாலை அணிந்து, விரதம் துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !