உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி அன்னபிரசாத வளாகத்தில் ஆயுத பூஜை; தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்!

திருப்பதி அன்னபிரசாத வளாகத்தில் ஆயுத பூஜை; தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் தேவஸ்தான செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அலுவலர் சி. வெங்கையா சௌத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


வேத மந்திரங்கள் முழங்க, பத்மாவதி தாயார் மற்றும் ஏழுமலையான் படங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அன்னபிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஆயுத பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து அன்னதானத் துறை ஊழியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்: நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சௌத்ரி, திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தைப் போலவே அன்னபிரசாத சேவையும் முக்கியமானது என்றார். திருமலையில் சாதாரண நாட்களில் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும், பிரம்மோற்சவ காலத்தில் சுமார் 4.60 லட்சம் பக்தர்களுக்கும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. தாரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகத்தில் மட்டும் தினமும் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை உணவருந்துகின்றனர். 1985-ம் ஆண்டு வெறும் 2,000 பேருடன் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்டம் தற்போது மிகப்பெரிய சேவையாக வளர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அன்னபிரசாத அறக்கட்டளைக்கு சுமார் ரூ.1,100 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இது தேவஸ்தான அறக்கட்டளைகளுக்குக் கிடைத்த மொத்த நன்கொடையில் 53 சதவீதத்துக்கும் அதிகமாகும். தற்போது அன்னபிரசாத அறக்கட்டளையின் நிதி சுமார் ரூ.3,100 கோடியாக உயர்ந்துள்ளது. தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 65 கோயில்களுக்கும் அன்னபிரசாத சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணா, அன்னபிரசாதத் துறை துணை செயல் அலுவலர் ராஜேந்திரா, ஸ்ரீவாரி கோயில் துணை செயல் அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !