உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி

மதுரை: கார்த்திகை தினத்தன்று (நவம்பர் 24) மட்டும், ஒருமுறை தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்திருந்தது. இதற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான அனைத்து வழக்குகளும், நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வு முன் கடந்த மூன்று நாட்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் மலை கல் துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து தமிழர் கட்சியை சேர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் அவரது வழக்கறிஞர் நேற்று முன்வைத்த வாதம்: மலை உச்சியில் உள்ள கல்தூணில் நெய் ஊற்றி திரி வைத்து விளக்கேற்றும் வகையில் குழிவான அமைப்பு உள்ளது-. அதில், லிட்டர் கணக்கில் நெய்யை ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றலாம். இரண்டு மணி நேரம் வரை தீபம் அணையாமல் எரிய வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு ஒரு நாள், 2 மணி நேரம் மட்டும் இந்த குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டு விடப்போகிறது. இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. தீபத் திருவிழா வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ள நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்தது.


உச்ச நீதிமன்றம் கூறியதாவது: திருபரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் சடங்குமுறைப்படி தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இருப்பினும், கார்த்திகை தினத்தன்று (நவம்பர் 24) மட்டும், ஒருமுறை நிகழ்வாக, தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது, இந்த வழக்கம் குறித்த இறுதி அங்கீகாரம் அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை (CISF) பணியமர்த்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, இந்த ஆண்டில், ஒரு முறை மட்டுமே செயல்படுத்தக்கூடிய உத்தரவு; இதை இறுதி உத்தரவாக கருதக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் தீபம் ஏற்றும் குழுவில் எத்தனை பேர் இடம் பெற வேண்டும் என்பதை மாவட்ட கலெக்டர் முடிவு செய்ய வேண்டும். கோவில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை, போலீஸ் கமிஷனருடன் இணைந்து மாவட்ட கலெக்டர் முடிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !