உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகைக்கு வெளிமாநிலம் செல்லும் மானாமதுரை மண் அகல் விளக்குகள்

கார்த்திகைக்கு வெளிமாநிலம் செல்லும் மானாமதுரை மண் அகல் விளக்குகள்

சிவகங்கை: கார்த்திகை விழாவிற்கு வீடுகளை அலங்கரிக்க, மானாமதுரையில் மகளிர் தயாரிக்கும் மண் அகல்விளக்குகள் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை குலாளர் தெருவில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். 50 கூடங்களில் சீசனுக்கு ஏற்ப மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கின்றனர். தற்போது ‛புவிசார் குறியீடு’ அந்தஸ்தை பெற்று இத்தொழிலில் விமரிசையாக நடக்கிறது. சீசனுக்கு ஏற்ப இங்கு மண்பாண்ட பொருட்கள் தயாரித்து விற்கின்றனர். கோடையில் குளுகுளு தண்ணீர் குடிக்க மண்பானை, கூஜா மற்றும் கடம், நாதஸ்வரம் போன்ற இசை கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. செட்டிநாடு சமையலை பெருமை படுத்தும் விதமாக மானாமதுரை மண்ணால் தயாரித்த சமையல் பொருட்கள் பிரசித்தி பெற்றவை. * கார்த்திகைக்கு அகல் விளக்கு: கார்த்திகை விழா நாட்களில் மாலை நேரத்தில் வீடுகளை அலங்கரிக்கும் விதமாக மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து மகளிர் வீடுகளை விளக்கொளியில் ஜொலிக்க செய்வார்கள்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மானாமதுரை மண் அகல்விளக்குகளுக்கு வரவேற்பு அதிகம். இதற்காக இங்குள்ள மண்டபாண்ட பொருள் தயாரிப்பு கூடங்களில் மண் அகல் விளக்குகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அகல் விளக்கு முதல் சர விளக்கு, ஒரு முக, 5 முக, 7 முக விளக்குகள், 2 முதல் 7 அடுக்குகள் வரையிலான அகல்விளக்குகள், கேரளா மாநில மக்கள் விரும்பும் குருவாயூர் விளக்கு, தேங்காய் விளக்கு, மாட விளக்கு, மேஜிக் விளக்கு, அணையா விளக்கு என 50 க்கும் மேற்பட்ட ரகங்களில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

* கார்த்திகைக்கு 7 லட்சம் விளக்கு:

மானாமதுரை ஆர்.அபர்ணா கூறியதாவது: இங்கு என்னை போன்ற பட்டதாரி, டிப்ளமோ முடித்த மகளிர் பலர் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியை செய்கிறோம். மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு குடிசை தொழில் சங்கம் மூலம் விளக்குகளை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறோம். விரும்பிய நேரத்தில் பணி செய்வதன் மூலம் ஒரு நபர் மாதம் ரூ.20 முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இடைக்காட்டூர் சுற்றுலா தலங்களுக்கு வரும் வெளிநாட்டினர் மானாமதுரைக்கு வந்து அகல்விளக்கு, மண்பாண்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கார்த்திகை திருவிழாவிற்காக மானாமதுரையில் இருந்து 6 முதல் 7 லட்சம் அகல், சரல், குருவாயூர் விளக்குகள் தயாரித்து பிற மாநிலங்களுக்கு அனுப்புகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !