உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: தேசிய மாநாடு தொடக்கம்

பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: தேசிய மாநாடு தொடக்கம்

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது அவதார நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டி, 10-வது அகில இந்திய ஸ்ரீ சத்ய சாய் சேவாதள மாநாடு இன்று ஆந்திர மாநிலம் பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மிக மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 10 ஆயிரம் சேவாதளத் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.


மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இறைவனின் தாமரைத் திருவடிகளுக்கு அனைவரும் கூட்டாக வணக்கம் செலுத்தினர். மாநாட்டின் கருப்பொருளான ‘இருத்தலும் உயர்ந்து வளர்தலும்’ (A Celebration of Being and Becoming) குறித்து சேவாதளத்தின் தேசிய இணைச் சேவை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர். சந்திரசேகரன் விளக்கினார். அன்பு, சேவை, இறைநிலை ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். இது வெறும் அமைப்பு சார்ந்த கூட்டம் மட்டுமல்ல; சேவாதளத் தொண்டராக இருப்பதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து, சாய்பாபாவின் போதனைகளை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான ஆன்மிக வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.


சேவையே வாழ்க்கையாக வேண்டும்!


அகில இந்தியத் தலைவர் நிமிஷ் பாண்டியா பேசுகையில், இந்த மாநாடு வெறும் உரைகள் மற்றும் விவாதங்களுக்கான நிகழ்ச்சி அல்ல; இறைவனிடம் சரணாகதி அடைவதையும் சேவைக்கான அர்ப்பணிப்பையும் கொண்டாடும் நிகழ்வு என்றார். ஒவ்வொரு சேவாதளத் தொண்டரும், பாலவிகாஸ் குருவும், மாணவரும் சமூக மாற்றத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என வலியுறுத்தினார். நீதிபதிகள், உயரதிகாரிகள், விஞ்ஞானிகள் எனப் பலரும் தங்களது உயர் பதவிகளைக் கடந்து எளிய சேவைகளைக்கூட மகிழ்ச்சியுடன் செய்வதை அவர் எடுத்துரைத்தார். சேவை என்பது அவ்வப்போது செய்யும் பணியாக இல்லாமல், முதலில் வீட்டிலிருந்து தொடங்கி வாழ்வின் ஓர் அங்கமாக மாற வேண்டும் என்றும், சேவை செய்வதில் அகந்தைக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். சாய்பாபாவின் பணியைச் செய்வதாக யாரும் உரிமை கொண்டாட முடியாது; அனைவரும் இறைவனின் கருவிகளே என்றும் குறிப்பிட்டார். தன்னலமற்ற சேவையின் உண்மையான பலன் பாராட்டுகளோ, விருதுகளோ அல்ல; மன அமைதி, அன்பு, ஆனந்தம் ஆகியவையே என்றார்.


சேவையின் மூலம் இறைவனை அடையலாம்!


முக்கிய உரையாற்றிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினருமான நீதிபதி வி. ராமசுப்பிரமணியன், தனது குடும்பத்துக்கும் சத்ய சாய்பாபாவுக்கும் இருந்த நீண்டகாலத் தொடர்பை நினைவுகூர்ந்தார். கடந்த 1970-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி, அதாவது சரியாக 56 ஆண்டுகளுக்கு முன்பு, தனது தந்தை இதே பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற நான்காவது அகில இந்திய மாநாட்டில் துணைக்குழு அறிக்கையைச் சமர்ப்பித்ததை நினைவுகூர்ந்தார். அவரது பெற்றோர் 1969-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட முதல் கட்ட சேவாதளத் தொண்டர்களில் இடம்பெற்றவர்கள். அவர்களுக்கு சாய்பாபாவே நேரடியாக சேவாதள அடையாளச் சின்னங்களை வழங்கியதாகவும் தெரிவித்தார். அனுமன், கிருஷ்ணர், பத்மபாதர் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, இறைவனுக்கும் குருவுக்கும் பணிவுடன் செய்யும் சேவை ஆன்மிக நிறைவைத் தரும் என்பதை விளக்கினார். நாரதர் ராம நாமத்தைத் தொடர்ந்து உச்சரித்தபோது, அனுமன் ராமபிரானுக்குத் தொண்டு செய்வதன் மூலம் தனது பக்தியை வெளிப்படுத்தினார் என்றும் குறிப்பிட்டார். மேலும், சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம், சாயுஜ்யம் என ஆன்மிக வளர்ச்சியின் நான்கு நிலைகளை விளக்கினார். இறுதியாக, சேவாதளத் தொண்டராக இருப்பதன் பெருமை ஒருவர் வகிக்கும் பதவியில் இல்லை; அவர் வெளிப்படுத்தும் பணிவு, சரணாகதி, அன்பு ஆகியவற்றில்தான் உள்ளது என வலியுறுத்தினார். சத்ய சாய்பாபாவின் அன்பு, சேவை, ஆன்மிகம் ஆகிய உயரிய கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !