அண்ணாமலையாருக்கு அரோகரா: மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 15ல், தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவில், நாளை, 24ல், பஞ்ச பூதங்கள் ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, இன்று, 23ல், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்திற்கு பயன்படுத்தும் மகா ராட்சத கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்வதற்கு முன் கோவில் சின்ன நந்தி வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ராட்சத கொப்பரையை, இன்று காலை தோளில் சுமந்து கோவில் ஊழியர்கள் மலை ஏறினர். மேலும், மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய், மற்றும், 1,150 மீட்டர், காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கோவில் வளாகத்தில் கலை அரங்கில் சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மீக பாடல்களும் ஒலித்தவாறு, விழா களை கட்டியுள்ளது.