தஞ்சாவூர் பெரியகோவிலில் சிலைகள் மாயமான வழக்கு: புதிய சிலைகளை அமைக்க சிவாச்சாரியார்கள் ஆய்வு
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் எட்டு திசைகளில் ஆகம விதிகள்படி, இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் உள்ளிட்ட அஷ்டதிக் பாலகர்களின் சன்னிதிகள் உள்ளன. இதில், இந்திரன், எமன், நிருதி, குபேரன் ஆகிய நான்கு சன்னிதிகளில் சிலைகள் இல்லை. பிற நான்கு சன்னிதிகளில், சிலைகள் சிதைந்துள்ளன.பக்தர்கள் வழிபடவும், பூஜைகள் தடையின்றி நடக்கவும், சன்னிதிகளை முறையாக பராமரிக்கவும், சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக, புது சிலைகள் நிறுவ அனுமதிக்க, மத்திய தொல்லியல்துறை அனுமதி தர வேண்டும் என, தஞ்சையை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர், 2019ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் புத்தனேந்தல் அழகர்சாமி பாண்டியன் மற்றும் துாத்துக்குடி மாவட்டம் சின்ராஜ் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை, கடந்த செப்.28ம் தேதி, விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, "சிதைந்த சிலைகளுக்கு, பதிலாக புது சிலைகளை நிறுவ வேண்டும். புது சிலைகள் நிறுவ நிபுணர்கள், ஸ்தபதிகளின் ஒப்புதலை பெற வேண்டும். இந்நடவடிக்கைகளை கலெக்டர், தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை கமிஷனர், மத்திய தொல்லியல்துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோவிலின் பரம்பரை அறங்காவலர் 3 மாதங்களில் துவங்கி, 12 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், பிள்ளையார்பட்டி வேதாகம வித்யாலயா பாடசாலை பொறுப்பாளர் பிச்சை சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம், ஸ்ரீகந்தகுரு சிவாகம வேத பாடசாலை பொறுப்பாளர் ராஜா பட்டர் சிதைந்த சிலைகள், மாயமான சிலைகளின் சன்னிதிகளை ஆய்வு செய்தனர். சிலைகள் வடிவமைப்பு தொடர்பாக, தஞ்சாவூர் மண்டல ஸ்பதி அருளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்வதானம் உதவி கமிஷனர் கவிதா, அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் சுந்தரராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.