உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பழைய தேரிலேயே பங்குனி உத்திர‌ தேரோட்டம்: புதிய தேர் தயாராகாததால் முடிவு

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பழைய தேரிலேயே பங்குனி உத்திர‌ தேரோட்டம்: புதிய தேர் தயாராகாததால் முடிவு

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில், புதிய தேர் தயாரிக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டதால், வரும் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவில், பழைய தேரிலேயே தேரோட்டம் நடத்த அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


ஆயிரம் ஆண்டு கால பழமையான கோயிலாகவும், பிரசித்தி பெற்ற கோயிலாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இத்தேர் திருவிழாவின்போது, சோமாஸ்கந்தர், பச்சை நாயகி அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, நடராஜர் ஆகியோர் எழுந்தருளும், 5 தேர்கள், கோயிலை சுற்றி வலம் வரும். இந்நிலையில், சோமாஸ்கந்தர் தேர், 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இத்தேரின் உறுதித்தன்மையில் சந்தேகம் இருப்பதாக, கடந்த முறை, தேருக்கு பொதுப்பணித்துறையினர் நிலைத்தன்மை சான்று வழங்கவில்லை. இதனால், தேரோட்டம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, பக்தர்களும், ஹிந்து அமைப்புகளும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், பொதுப்பணித்துறையினர் நிலைத்தன்மை சான்று வழங்கினர். அதன்பின், தேரோட்டம் நடந்தது. அடுத்தாண்டு, புதிய தேர் செய்து, தேரோட்டம் நடத்த திட்டமிட்டனர். அதற்காக, மைசூரில் இருந்து மே மாத இறுதியில், மரங்கள் கொண்டுவரப்பட்டு, புதிய தேர் செய்யும் பணி துவங்கப்பட்டது. சில நாட்களிலேயே, அம்மரத்தின் உறுதித் தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, அறநிலையத்துறை ஸ்தபதிகள் நேரில் ஆய்வு செய்து, அம்மரத்தை நிராகரித்தனர். அதன்பின், தற்போது, ஆஸ்திரேலியாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடிக்கு புதிய மரம் கொண்டுவரப்பட்டு, 4 நாட்களுக்கு முன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, பூஜை செய்யப்பட்டது‌. திங்கட்கிழமை புதிய மரத்தில் தேர் செய்யும் பணி துவங்கப்பட உள்ளது. இருப்பினும், திருவிழாவிற்கு முன்பு புதிய தேர் தயார் செய்ய முடியாது என்பதால், வரும் பங்குனி உத்திரத் தேர் திருவிழாவில், பழைய தேர் கொண்டு தேரோட்டம் நடத்த அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


இதுகுறித்து, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உதவி கமிஷனர் சத்யவதி கூறுகையில்,"புதிய மரம் தற்போது தான் வந்துள்ளது. பங்குனி உத்திர தேர்த்திருவிழாவிற்குள், புதிய தேர் செய்வது சிரமம். இதனால், வரும் பங்குனி உத்திர தேர் திருவிழாவில், பழைய தேரை கொண்டே, தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினரும், இரு நாட்களுக்கு முன் தேரை ஆய்வு செய்து சென்றுள்ளனர்,"என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !