ஆவுடையார் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த மூணுசாவடி ஆவுடையார் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர். ராசிபுரம் அருகே மூணுசாவடியில், பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்பிகா சமேத சதுர்வேத நாதர் ஆவுடையார் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், விநாயகர், துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி, பைரவர், பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் ஸ்வாமி, நவக்கிரக பரிவார தேவதைகள் உள்ளன. பழமை வாய்ந்த கோவிலுக்கு, ராசிபுரம் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டு செல்வர். கோவில் திருப்பணிகள் முடிந்ததையடுத்து, ஃபிப்ரவரி, 14ம் தேதி, கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று அதிகாலை, 4 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை, காயத்ரி ஹோமம், மஹா பூர்ணாகுதி, குடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 5 மணிக்கு விநாயகர், விசாலாட்சியம்மன் சமேத சதுர்வேத நாதர் ஆவுடையார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிவஸ்ரீ பழனிசாமி சிவாச்சாரியார், சிவஸ்ரீ ரத்ன சபாபதி சிவாச்சாரியார், சிவஸ்ரீ கணபதி அய்யர், ராமர், லட்சுமணன் ஆகியோர், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். ராசிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள்பெற்றுச் சென்றனர்.