உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொடர்ந்து மூன்று முகூர்த்த நாட்களால் அதிர்ந்தது ஆந்திரா!

தொடர்ந்து மூன்று முகூர்த்த நாட்களால் அதிர்ந்தது ஆந்திரா!

ஐதராபாத்: ஆந்திராவில், தொடர்ந்து, மூன்று நாள் முகூர்த்தங்களால், அர்ச்சகர்களுக்கும், திருமண மண்டபங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கட்டணங்களும் அதிகரித்தன. தெலுங்கு பஞ்சாங்கத்தின் படி, இம்மாதம், 13,14 மற்றும் 15 ஆகிய, மூன்று தினங்கள் தான் சிறப்பான முகூர்த்த நாட்கள். அதற்கு பிறகு, மே மாதம், இரண்டாம் வாரத்திற்கு பிறகு தான், சுபமுகூர்த்த தினங்கள் வருகின்றன. எனவே, இந்த மூன்று நாட்களிலும், மங்கள காரியங்களை செய்து முடித்து விட வேண்டும் என, இந்துக்கள் முடிவு செய்ததால், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணம், சுப காரியங்கள் நடந்துள்ளன. இன்றுடன், சுபமுகூர்த்த நாட்கள் முடிவடைவதால், இன்று மட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முகூர்த்தங்கள் முடிவாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில், ஏராளமான மங்கள நிகழ்ச்சிகள் நடந்ததால், அவற்றை நடத்தும் அர்ச்சகர்கள், விருந்திற்கான, சமையல் கலைஞர்கள், ஒப்பனையாளர்கள் போன்றவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.முகூர்த்த நாட்களை முன்கூட்டியே அறிந்து, திருமண மண்டபங்களை முன் பதிவு செய்து விட்டதால், கடைசி நேரத்தில், மண்டபம் கிடைக்காத ஏராளமானோர், கோவில்களிலும், வழிபாட்டு மையங்களிலும் சுப காரியங்களை நடத்தி முடித்துள்ளனர். மாநிலத்தின் முக்கிய கோவிலான, திருப்பதியில், ஆயிரக்கணக்கான திருமணம் நடந்து முடிந்துள்ளதாகவும், இன்றும், ஏராளமான திருமணங்கள் நடக்க உள்ளதாகவும், கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "சுக்ர மூதம், குரு மூதம் போன்ற, மங்கள காரியங்களுக்கு பொருந்தாத மாதங்கள், பிப்ரவரி, 15ம் தேதிக்கு பிறகு வருவதால் தான் இவ்வளவு அவசரம் என, திருமண மண்டப உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அது போல், "ஜூன், ஜூலை மாதங்களில் சில நாட்கள் மட்டுமே, சுபமுகூர்த்த நாட்கள் வருவதால், இந்த மாதத்தின், மூன்று நாட்களில் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க பெரும்பாலானோர் விரும்பினர். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முகூர்த்த தினங்கள் இல்லை; அக்டோபரில் தான் வருகிறது என்பதால் தான், இந்த கெடுபிடி என, சமையல் ஒப்பந்தக்காரர்கள் கூறினர். மூன்று நாட்களில் முகூர்த்தம் முடிகிறது என்பதாலும், அதற்கு பிறகு, மூன்று மாதங்களுக்கு முகூர்த்தகங்கள் இல்லை என்பதாலும், திருமண மண்டபம், அர்ச்சகர்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் பிறரின் கட்டணங்களும் அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கான மங்கள நிகழ்ச்சிகளால், ஆந்திர மாநிலம் அதிர்ந்தது என்றால் மிகையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !