உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷ மதிப்பீடு!

பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷ மதிப்பீடு!

திருவனந்தபுரம்: கேரளா திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோவில், பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை, மதிப்பீடு செய்யும் பணியை, நான்கு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பத்மநாப சுவாமி கோவிலில், பூமிக்கடியில் உள்ள ஆறு அறைகளில், நூற்றாண்டு பழமை வாய்ந்த, தங்க, வைர மற்றும் ரத்தின பொக்கிஷங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றை மதிப்பீடு செய்ய, உயர்மட்டக் குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அந்தக் குழுவினர், நவீன ரக கருவிகளை பயன்படுத்தி, பொக்கிஷங்களை மதிப்பீடு செய்து வருகின்றனர். இந்நிலையில், பத்மநாபசுவாமி கோவிலில் தற்போதுள்ள பிரச்னைகள், அவற்றை சீர்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆராய்ந்து அறிக்கை தர, சுப்ரீம் கோர்ட் சார்பில், வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் சமர்ப்பித்த அறிக்கையை, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான, சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச் நேற்று முன் தினம் பரிசீலித்ததது. இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பத்மநாப சுவாமி கோவிலுக்கு, புதிய முதன்மை செயல் அலுவலரை, 10 நாட்களுக்குள் நியமிக்க வேண்டும். அதே நேரத்தில், அசுவதி திருநாள் கவுரி லட்சுமிபாயின் மகன், ஆதித்ய வர்மாவை கோவிலின் முதன்மை செயல் அலுவலராக நியமிக்கக் கூடாது. கோவிலின் பத்ம தீர்த்தம் மற்றும் மித்ரானந்தபுரம் குளத்தை, ஒரு மாதத்திற்குள் சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். கோவிலின் பாதுகாப்பு குறித்து, இரு வாரங்களுக்குள், பொக்கிஷங்களை மதிப்படு செய்யும், உயர்மட்டக் குழுவிடம், கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோவிலின் பாதாள அறைகளில், சி, டி, இ மற்றும் எப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை, நான்கு வாரத்திற்குள் மதிப்பீடு செய்து, உயர்மட்டக் குழு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !