ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்!
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், வரும், 24 ம் தேதி, தெப்ப உற்சவம் மற்றும் 25ம் தேதி, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 திவ்வியதேச திருத்தலங்களில், 63வது தலமாக புகழ்பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசிமகத்தை முன்னிட்டு, தெப்ப உற்சவம் மற்றும் வங்க கடலில் புனித தீர்த்தவாரி விழா கோலாகமாக நடைபெறும். தற்போது, வரும், 24ம் தேதி, தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் மற்றும் சாற்றுபடியுடன் வழிபாடு நடைபெறும். இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோவிலிலிருந்து, புண்டரீக புஷ்கரணி திருக்குளத்திற்கு சென்று, தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பகுளத்தில் வலம் வருவார். அதைத்தொடர்ந்து மாடவீதிகளில் வீதியுலா செல்வார். வரும், 25ம் தேதி காலை, சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, கிழக்குராஜ வீதி, ஒற்றை வாடைத் தெரு வழியாக கடற்கரை சென்று, சிறப்பு வழிபாட்டிற்குபின், அவரது அம்சமான சக்கரத்தாழ்வார் கடலில் புனித (தீர்த்தவாரி) நீராடுவார். அதே பகுதியில் ஆதிவராகப் பெருமாளும் புனித நீராடுவார்.