சாரபரமேஸ்வரர் கோவிலில் மாசிகார்த்திகை விழா சிறப்பு வழிபாடு
கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறையில் ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதிகொண்டுள்ள ரினவிமோசன லிங்கேஸ்வரருக்கு, திங்கட்கிழமை தோறும், மூன்று கால சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடைபெறுவது சிறப்பு. பைரவருக்கென தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில், சுப்ரமணியர் தனிசன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். நேற்று மாசிக்கார்த்திகை தினத்தையொட்டி, சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்பலங்காரம், ஆராதனை நடைபெற்றது. பின் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுப்ரமணியரை வழிபட்டனர். சிறப்பு பூஜைகளை ஆலய அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் செய்தார். விழா ஏற்பாடுகளை தக்கார் நிர்மலாதேவி, நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.