உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை உத்திர திருவிழா: பம்பையில் ஆராட்டுடன் நிறைவு!

சபரிமலை உத்திர திருவிழா: பம்பையில் ஆராட்டுடன் நிறைவு!

சபரிமலை: சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா நேற்று நண்பகல் பம்பையில் நடைபெற்ற ஆராட்டுடன் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து இரவு பத்து மணிக்கு திருக்கொடி இறக்கப்பட்டது. சபரிமலையில் பங்குனி உத்திரம் தினத்தில் ஆராட்டு நடைபெறும் வகையில் பத்து நாட்கள் முன்னதாக கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுகடந்த 18-ம் தேதி திருவிழா கொடியேறியது. அன்று காலை பத்து மணிக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடிப்பட்டத்துக்கு பூஜை செய்தார். பின்னர் மேளம் தாளம் முழுங்க கொடிப்பட்டம் பவனியாக கொண்டு வரப்பட்டது. நெற்றிப்பட்டம் கட்டிய யானை கொடிமரம் முன் வந்து நிற்க பக்தர்களின் சரணகோஷம் முழங்க தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றினார். அன்று முதல் ஒன்பதாம் திருவிழா வரை தினமும் உச்சபூஜைக்கு முன்னோடியாக உற்சவபலி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அத்தாழபூஜைக்கு பின்னர் ஸ்ரீபூதபலி என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்தாம் திருவிழா முதல் தினமும் இரவு ஒன்பது மணிக்கு யானை மீது சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்பதாம் நாளான 26-ம் தேதி பள்ளிவேட்டைக்காக சுவாமி சரங்குத்திக்கு எழுந்தருளினார். நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெற்றது. அதன் பின்னர் ஸ்ரீகோயிலுக்கு எழுந்தருளிய சுவாமி கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளி உறங்கினார். நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து கோயிலுக்குள் சுவாமியை ஆகாவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து வழக்கமான நெய்யபிஷேகம் மற்றும் உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு நடை அடைக்கப்பட்டு யானை மீது சுவாமி பம்பைக்கு எழுந்தருளினார். மதியம் 12.30 மணி வாக்கில் பம்பை வந்ததும் பம்பை திருவேணி சங்கமத்தில் ஆராட்டு நடைபெற்றது. தந்திரியும், பூஜாரிகளும் சுவாமி விக்ரகத்துடன் பம்பையில் மூழ்கி எழுந்தனர்.  மாலை மூன்று மணி வரை பம்பையில் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சன்னிதானத்துக்கு சுவாமி எழுந்தருளினார். பத்து மணி வாக்கில் சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !