திருமலையில் அலை மோதும் பக்தர்கள்: இலவச தரிசனம் செய்ய 24 மணி நேரம்!
நகரி: கோடை விடுமுறை துவங்கிவிட்டாலே, திருப்பதி திருமலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். நேற்றும், நேற்று முன்தினமும், 1.5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு லட்சம் பக்தர்கள், தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் உள்ளனர். மேலும், பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டு உள்ளன. இதையடுத்து, திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.திருமலை, கியூ காம்ப்ளக்ஸ் நிரம்பிய நிலையில், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்று முன்தினம், இலவச தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களுக்கு, தரிசனம் செய்ய, 24 மணி நேரம் ஆகும் என, அறிவிக்கப்பட்டது. சிறப்பு தரிசனத்திற்கு, 12 மணி நேரமும், பாத யாத்திரை பக்தர்களுக்கு, 14 மணி நேரம் ஆகும், எனவும் அறிவிக்கப்பட்டது. வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப் பட்டது. குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க முடியாமல், நிர்வாகம் திணறியது. கையில் காகித தட்டுடன் காத்திருந்த பக்தர்கள், பசி தாங்க முடியாமல் கூச்சல் எழுப்பினர். கோவிலுக்கு வெளியே வரிசையில் நின்றிருந்த பக்தர்கள், இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சிரமப்பட்டனர். ஆர்ஜித சேவா டிக்கெட் கவுன்டர் மற்றும் தங்கும் விடுதி பெறவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.
முதல்வருக்கு மொட்டை: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மாநில அமைச்சர் பார்த்தசாரதி ஆகியோர் திருமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் திருமலைக்கு வந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, சுவாமிக்கு முடி காணிக்கை செலுத்தி, பெருமாளை தரிசனம் செய்தார்.