சித்திரை திருவிழா பக்தர்களுக்கு அறிவிப்பு!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 13 முதல் ஏப்., 25ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த உற்சவ நாட்களில் காலை, இரவு வேளைகளில், சுவாமி புறப்பாடாகி, நான்கு மாசிவீதிகளிலும் வலம் வருவார். சுவாமி வாகனம் தட்டாதவாறு, விட்டவாசல், அம்மன் சன்னதி, நான்கு மாசிவீதிகளில் பந்தல், அலங்கார தோரணங்களை கட்டுவோர், 30 அடிக்குமேல் அமைக்க வேண்டும். வீதியுலா நேரத்தில் சுவாமிக்கு உகந்த மாலைகளே (கேந்திரப்பூ, மருதைவேரால் தயார் செய்யப்பட்ட மாலைகள் தவிர) பக்தர்களிடம் பெற்று சாத்துபடி செய்யப்படும். சித்திரை திருவிழா நாட்களில், கோயில் சார்பிலோ, உபயதாரர்கள் சார்பிலோ, உபய திருக்கல்யாணம், தங்கரத உலா போன்றவை நடத்தப்பட மாட்டாது.
மாரியம்மன் கோயில்: மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஏப்., 3 முதல் 12ம் தேதி வரை உற்சவம் நடக்க உள்ளது. ஏப்., 2ம் தேதி (இன்று) கோயிலில் அம்மன் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வார். அங்கு இரவு தங்கி, மறுநாள் (ஏப்.,3ல்) புறப்பாடாகி, தெப்பக்குளம் கோயில் வந்தடைவார். ரத உற்சவம் ஏப்., 11ம் தேதி நடக்க உள்ளது என, இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.