உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர் இல்லாததால் பல்லக்கில் வீதி உலா: பக்தர்கள் வேதனை!

தேர் இல்லாததால் பல்லக்கில் வீதி உலா: பக்தர்கள் வேதனை!

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் கோவிலுக்கு சொந்தமான, திருத்தேர் சிதிலமடைந்துள்ளதால், சுவாமி உற்சவத்தில், தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் இல்லாததால், மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவத்தின் போது, பல்லக்கில் வீதி உலா நடத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது, மிகவும் பழமையானது.

தேரோட்டம்: இக்கோவிலில், ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, வைணவத்தை வளர்த்த ராமானுஜர், தன்னுடைய, 120வது வயதில் முக்தி அடைந்தார். அவருக்கு பின், அவர் விட்டு சென்ற சமூகப் பணியை, 80 ஆண்டுகள் மணவாள மாமுனிகள் செய்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு அருகில், மணவாள மாமுனிகள் சுவாமி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், பத்து நாட்கள் மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவம் நடைபெறும். பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் நாள், மணவாள மாமுனிகள் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதற்காக, மணவாள மாமுனிகள் சுவாமிக்கு தனித்தேர் வடிவமைக்கப்பட்டது. இத்தேரில், மணவாள மாமுனிகள் வீதியுலா வந்தார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் பழுதானபோது, மணவாளமாமுனிகள் தேர், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிகள் வீதியுலாவிற்கு பயன்படுத்தப்பட்டது.

பழுது: பாதுகாப்பின்மை, இயற்கை இடர்பாடு உட்பட, பல்வேறு காரணங்களால் தேர் சிதிலமடைந்தது. ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு, புதிய தேர் உருவாக்கப்பட்டது. மணவாளமாமுனிகள் கோவில் தேர் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து, மணவாள மாமுனிகள், சுவாமி கோவிலுக்கு தேர் இல்லை. இதனால், தேர் உற்சவத்தன்று, மணவாள மாமுனிகள், பல்லக்கில் வீதியுலா வருகிறார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு, ஸ்ரீபெரும்புதூரில், 250 ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள் உள்ளன. இவற்றின் மூலம் கோவிலுக்கு வருவாய் வருகிறது. இவ்வருவாய் மற்றும் பக்தர்கள் உதவியோடு, மணவாள மாமுனிகள் கோவில் தேரை சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !