உறையூர் வெக்காளியம்மன் தேர் திருவிழா கோலாகலம்
திருச்சி: உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேர் திருவிழா பிரசித்திப்பெற்றது. நடப்பாண்டு சித்திரை தேர் திருவிழா, 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து பகல், 12 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இரவில் பல்வேறு வாகனங்களில் வெக்காளியம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் நேற்று காலை நடந்தது. உற்சவர் வெக்காளியம்மன் சர்வ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 10 மணியளவில் தேர் வடம் பிடிக்கப்பட்டு, 12 மணியளவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், பால்குடம், அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தேரோட்ட திருவிழாவையொட்டி, வெக்காளியம்மனுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் நேற்று மாலை செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் ஜெயப்பிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அன்னதானம்: வெக்காளியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி, உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் தண்ணீர் பந்தல் அமைத்து, பக்தர்களுக்கு நீர், மோர், பானகம் வழங்கினர். ஏராளமான இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.