சூலூர் வட்டார ஆஞ்சநேயர் கோவில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா; பக்தர்கள் பரவசம்
சூலூர்; சூலூர் வட்டார ஆஞ்சநேயர் கோவில்களில், ஹனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஹனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி, கணியூர் பூதேவி ஸ்ரீ தேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஹனுமந்த ராய சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். இதேபோல், பெரிய குயிலி கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த, 17 ம்தேதி ஹனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. இன்று காலை, 7:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். நாம சங்கீர்த்தனம், வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. கீதா பஜன் அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கரவழி மாதப்பூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி மற்றும் ஒன்பதாம் ஆண்டு விழா இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. மாலை சங்கமம் நாட்டுப்புற கலைக்குழு வின் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடக்கிறது.