ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை!
ஓசூர்: மழை வேண்டி, 10 குழந்தைகளை, தண்ணீர் பாத்திரத்தில் ஒரு மணி நேரம் உட்கார வைத்து, விநாயகருக்கு, வினோத பூஜை செய்து வழிப்பட்டனர். ஓசூர் பகுதியில், இரு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், வரலாறு காணாத வறட்சி காணப்படுகிறது. ஆறுகள், ஏரிகள், விவசாய கிணறுகள் வறண்டு, சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தட்டுப்பாடு ஆழ்துளை கிணறுகள் வறண்டு, நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி எல்லையில் வசிக்கும் பொதுமக்களுக்கு, 20 முதல், 25 நாட்களுக்கு ஒருமுறை, குடிநீர் வழங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை, பொதுமக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால், சமூக, தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.
கணபதி ஹோமம்: இந்த நிலையில், ஓசூர் வசந்த் நகர் கற்ப விநாயகர் கோவிலில், நேற்று, பக்தர்கள், மழை வேண்டி விசேஷ கணபதி ஹோமம், ஜலாதி வாசம், வருண ஜெபம் செய்து வழிபட்டனர். அப்போது, கருவறை மூலவர் விநாயகரை, தொட்டி தண்ணீரில் வைத்து, கணபதி ஹோமம் செய்தனர். அதன்பின், 10 குழந்தைகளை, தண்ணீர் பாத்திரத்தில் ஒரு மணி நேரம் தொடர்ந்து உட்கார வைத்து, கோவில் பூசாரி சிவகுமார், மழை வேண்டி விநாயகருக்கு ஜலாதி வாசம், வருண ஜெபம் செய்தார். ஏராளமான பக்தர்கள், சிறப்பு பூஜையில் பங்கேற்று, மழை வேண்டி வழிபட்டனர்.