சித்ராபவுர்ணமி கருங்குளம் மலையிலிருந்து உற்சவர் இறங்கும் நேரம் மாற்றம்
திருநெல்வேலி: சித்ரா பவுர்ணமியான இன்று (25ம் தேதி) சந்திரகிரகணம் என்பதால் கருங்குளம் வகுளகிரி மலையிலிருந்து உற்சவர் பகலில் இறங்கும் வகையில் நிகழ்ச்சி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.நெல்லையை அடுத்த கருங்குளம் வகுளகிரி மலையில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 10 நாட்கள் சித்ரா பவுர்ணமி விழா நடப்பது வழக்கம். 10ம் நாள் இரவு 10 மணிக்கு பக்தர்கள் சுவாமியை மலையிலிருந்து இறக்கி வீதி உலா எடுத்து செல்வர். பின் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இறக்கி மீன் விளையாட்டு நடக்கும். மறுநாள் மீண்டும் சுவாமியை பக்தர்கள் மலைக்கு கொண்டு செல்வர். இந்த வைபவம் நீண்ட காலமாக நடந்து வருகிறது.இந்த ஆண்டிற்கான சித்ராபவுர்ணமி கருங்குளம் வகுளகிரி மலையில் விழா கடந்த 16ம் தேதி காலை தேங்காய் சாத்தி பந்தல்கால் நாட்டும் வைபவத்துடன் துவங்கியது. அன்று இரவு சுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி மலைமேல் அமைந்துள்ள கோயிலை சுற்றி வந்தார். இதனையடுத்து 17ம் தேதி முதல் நேற்று (24 ம் தேதி) வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.திருவிழாவின் 10ம் நாளான இன்று (25ம் தேதி) காலை 7.30 மணிக்கு உற்சவர் எழுந்தருளி திருமண்டலம் வந்து சேருகிறார். 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.இன்று (25ம் தேதி) சித்ரா பவுர்ணமி என்பதால் வழக்கத்திற்கு மாறாக மாலை 4 மணிக்கு உற்சவர் பொன் சப்பரத்தில் எழுந்தருளி மலையிலிருந்து கீழே இறங்கும் வைபவம் நடக்கிறது.இதனையடுத்து சுவாமி வீதி உலா சென்று அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு செல்கிறார். இரவு 9 மணிக்கு சுவாமி மறைவிடம் செல்கிறார். சந்திர கிரஹணம் முடிந்த பின் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.