தேவி கருமாரியம்மன் கோவில் அன்னதான கட்டட பணி துரிதம்!
அண்ணா நகர்: திருவேற்காடு தேவி கருமாரிஅம்மன் கோவில் அன்னதான மண்டபம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.திருவேற்காடு தேவிகருமாரிஅம்மன் கோவில், இந்துசமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
குளிர் சாதனை அறை: இக்கோவிலுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவில் அருகே, பக்தர்களின் வசதிக்காக, அன்னதான மண்டபம், சிறிய திருமண மண்டபம், தங்கும் அறைகள் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. ஏற்கனவே, 650 பேர் அமரக் கூடிய வகையில், பெரிய அளவில் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வரும் நிலையில், 200 பேர் அமரக் கூடிய வகையில், 4,500 சதுரடி பரப்பில், 23 லட்சம் ரூபாய் செலவில் சிறிய திருமண மண்டபம் அமைக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.அதே போல், வெளியூர் பக்தர்களின் வசதிக்காக, கீழ் தளம் மட்டுமே கொண்ட ஒரு வளாகத்தின் மேல் பகுதியில், 50 லட்சம் ரூபாயில், குளிர்சாதன அறைகள் அடங்கிய ஏழு அறைகள் கொண்ட, முதல் தளம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில்...தற்போது, 4,500 சதுரடி பரப்பளவில், 98 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட அன்னதான மண்டபம் அமைக்கும் பணி, இன்னும் முடிவுறாமல் உள்ளது.இப்பணி, இன்னும் இரண்டு மாதங்களில் முடியும் எனவும், அது முடிந்தவுடன், திருமண மண்டபம், விடுதி அறைகள் என, அனைத்தையும், முதல்வர் ஜெயலலிதா, திறந்து வைப்பார் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.