உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க.. ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்!

ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க.. ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்!

திருச்சி: பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க, ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் விசேஷம் என்றாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேரோட்ட திருவிழாவும் வெகு பிரசித்திப் பெற்றது. விஜயநகர அரசரான இரண்டாம் ஹரிஹரனின் மகன் விருபாஷன் என்ற விருப்பண்ண உடையார், ஸ்ரீரங்கம் கோவில் புனர் நிர்மாணத்துக்காக ஏராளமான நன்கொடைகள் வழங்கியுள்ளார். தம்முடைய பெயரால் சித்திரை மாதத்தில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தை, கி.பி. 1383 ஆண்டு ஏற்படுத்தி வைத்தார். ஆயிரம் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து நடக்கும் விருப்பன் திருநாள், கடந்த, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் பல்வகை வாகனங்களில் எழுந்தருளி, ஆஸ்தான மண்டபகங்களில் மண்டகப்படி கண்டருள்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை, 4 மணிக்கு, நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருத்தேருக்கு புறப்பாடு கண்டருளினார். 4.30 மணிக்கு, சித்திரைத்தேர் மண்டபத்தை சென்றடைந்தார்.

அதிகாலை, 4.45 முதல், 5.15 மணிக்குள் மேஷ லக்னத்தில், நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. பக்தர்களின் "ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க, மக்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேர் நிலைக்கு வந்தவுடன் ரேவதி மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். பாண்டியன் கொண்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கிளி மாலை, நீல நாயகம் உள்ளிட்ட ஆடை அணிகலன்களுடன் வீற்றிருந்த நம்பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸேவித்தனர். சித்திரைத்தேர் திருவிழாவையொட்டி நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்திருந்தனர். பக்தர்களின் தாகம் தணிக்கும் வகையில், ஏராளமான இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு, நீர், மோர், பானகம் வழங்கப்பட்டன. ஸ்ரீரங்கம் போலீஸ் ஏ.சி., ஜெயச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கல்யாணி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !