தேவலோகமே வெறிச் ஏன்?
ஒருமுறை நாரதர் தேவலோகம் சென்றிருந்தார். இந்திரன் உள்ளிட்ட ஒருவரின் நடமாட்டம் கூட இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. நாரதருக்கு ஆச்சரியம். ஒரு மூலையில் ஒரே ஒரு ரிஷி மட்டும் தவம் செய்து கொண்டிருந்தார். வேறு வழி யில்லாமல் அவருடைய தியானத்தைக் கலைத்தார் நாரதர். நாரதரின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட ரிஷி,கோகுலம் செல்லுங்கள் என்று பதிலளித்து விட்டு கண்ணை மூடிக் கொண்டார். நாரதர் கண நேரமும் தாமதிக்காமல் பூலோகம் வந்தார். சின்னஞ்சிறு குழந்தையாக கண்ணன் புழுதியில் கோகுல பாலனாக விளையாடிக் கொண்டிருந்தான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களும், ரிஷிகளும் கண்ணனாய் பிறந்த நாராயணனின் பால லீலைகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். அரிய தவத்தாலும் அடையமுடியாத பரம் பொருள், தன்னை எளியவனாக்கிக் கொண்டு பூலோகம் வந்த அதிசயத்தை எண்ணிய நாரதர், நாராயண நாராயண என்று ஜபித்து மகிழ்ந்தார். கோகுல கிருஷ்ணனே மகாவிஷ்ணுவின் பூரணமான அவதாரம் என்று பாகவதம் குறிப்பிடுகிறது. பாகவதம், நாராயணீயம், பக்தவிஜயம், ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி, ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிர்தம் போன்ற நூல்கள், கண்ணனின் பாலலீலைகளை போற்றிக் கூறுகின்றன.