ஆதிவாசி கோவில் விழா தேங்காய் உடைத்து குறி சொன்ன சாமியாடிகள்!
பந்தலூர்: பந்தலூர்அருகே ஏலமன்னா கிராமத்தில் பனியர் இன ஆதிவாசி மக்களின் கோவில் திருவிழா நடந்தது. பந்தலூர் பகுதியில் வாழ்ந்து வரும் பனியர் இன பழங்குடி மக்கள், "குளியன், மாரி ஆகிய தெய்வங்களை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏலமன்னா கிராமத்தில் நடந்த திருவிழாவில், பந்தலூர் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். "வெளுத்தா என்பவர் சாமியாடியாகவும், அவருடன் 3 பேர் உதவியாக இருந்தனர். சிகப்பு மற்றும் கருப்பு துணியை கட்டிக்கொண்ட இவர்கள், சாமியாடும்போது பனியா மற்றும் கன்னடம் மொழிகளில் பேசினர். ஒரு ரூபாய் நாணயத்திலும், தேங்காய் வழங்கினால், அதனை வேல்கம்பினால் உடைத்தும் குறிகூறினர். தொடர்ந்து, வேண்டுதலுக்காக கொண்டுவரப்பட்ட கோழிகளை பூஜைக்கு பின்னர், தலைமை சாமியாடி கடித்து ரத்தம் குடித்து வீசியெறிந்தார். வீசிய கோழியை எடுத்து, அங்கேயே சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில், ஆதிவாசி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை சி.டி.ஆர்.டி. இயக்குனர் ரங்கநாதன் தலைமையில் ஊழியர்கள், கிராமத்து மக்கள் செய்திருந்தனர்.