பூக்குண்டம் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக் கடன்!
குன்னூர்: பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவில் பூக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர். குன்னூர் பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவில் பூக்குண்ட திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் தேதி மாலை முத்துப்பல்லக்கு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. பழைய அருவங்காடு குழந்தைகளின் விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை 11:30 மணிக்கு கோவில் தர்மகர்த்தா சங்கர் தலைமையில் பூக்குண்டம் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் பூக்குண்டத்தில் இறங்கினர். மதியம் அன்னதானம் மற்றும் மாலையில் மாவிளக்கு பூஜை நடந்தது. இரவு அலங்கார தேரில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவை, முன்னிட்டு பழைய அருவங்காடு வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. பின்னர் நள்ளிரவு அம்மன் கங்கை சேர்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.