உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா கோலாகலம்

வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா கோலாகலம்

மணப்பாறை: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழாவில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மணப்பாறை நகரின் மையப்பகுதியில் மைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் 500 ஆண்டு பழைமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா சிறப்பானதாகும். கடந்த ஏப்ரல், 19ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் துவங்கிய திருவிழாவில் நேற்றுமுன்தினம் காலை சிறப்பு வாய்ந்த பால்குட விழா நடந்தது.காலை ஆறு மணிக்கு கோவில் முன் பச்சை மூங்கிலில் கொடியேற்றம் நடந்தது. அதன்பின் காலை ஏழு மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பரம்பறை நாட்டாண்மை கலையரசன், அறங்காவலர் வீரமணி தலைமையில் பால்குட ஊர்வலம் மங்கல வாத்தியங்கள் முழங்க துவங்கியது.அதன்பின், பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து ராஜ வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர். விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை 8.30 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த, 30 ஆயிரம் லிட்டர் பாலால் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள், இளைஞர் மன்றங்கள், ரசிகர் மன்றங்கள் சார்பில், அன்னதானமும், நீர், மோர், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !