ரிஷபம்: என்ன சுகம்! என்ன சுகம்! தந்திடுவார் இனிய சுகம்!
இனிய பேச்சால் அனைவரையும் கவரும் ரிஷபராசி அன்பர்களே!
ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு மே 28 முதல் சுபஸ்தானமான இரண்டாமிடத்திற்கு பெயர்ச்சியாகிறார். தனது பார்வை பலத்தால் 6,8,10 இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 6ல் இருந்து 3,8,12 ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். ஆமெனவே வியாழனுமே இரண்டு ஐந்தேழ், அடுத்த ஒன்பது பதினொன்றில் வாழ தாமென செல்வமொடு குதிரை உண்டாம் தழைக்குமே குடை தர்ம தானம் ஓங்கும் நாமென தாய்தகப்பன் புதல்வராலே நன்மையாம் அருமையோடு பெருமையுண்டாம்போமென அரசர்க்கு நல்லோனாக்கும்புகழ் சோபனம் நடக்கும் பூமியாள்வன் என்கிறது ஒரு வெண்பா.இதன்படி, என்ன சுகம்...என்ன சுகம் என்று பாடுமளவு வாழ்க்கைச் சக்கரம் சுமூகமாக சுழலும். மனதில் தைரியம் மேலோங்கும். ஆயுள்பலம் அதிகரிக்கும். தொல்லை அளித்து வந்த நோய்நொடி அனைத்தும் விலக ஆரம்பிக்கும். தடைபட்டவருமானம் சரளமாகும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியைக் கூட தற்போது நிறைவேற்ற முடியும். சனியின் பார்வை தைரிய ஸ்தானத்தில் படுவதால் அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. இளைய சகோதரர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம் கவனம். அவர்களுக்கு செலவு செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவீர்கள். தாயின் தேவையறிந்து செயல்பட்டு அவரின் அன்பும் ஆசியும் பெறுவீர்கள். வீடு கட்டும் நோக்கில் புதிய மனை வாங்கும் யோகமுண்டு. சிலருக்கு புதிய வீடு, வாங்கும் அனுகூலம் உண்டாகும். புத்திரப்பேறு வாய்க்காமல் வருந்தும் தம்பதியருக்கு பொன்னான காலம் இது. குலதெய்வ அருள் பூரணமாக கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். திறமையின் காரணமாக வேலைவாய்ப்பிலும் முன்னணி வகிப்பர். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனி,ராகுவால் உடம்பில் உஷ்ணவியாதிகள் தலைதூக்கும். பொருளாதார உயர்வால் கடன்தொல்லை நீங்கும். ராகுவின் சேர்க்கை ஆறாமிடத்தில் இருப்பதால், எதிர்கால வளர்ச்சி கருதி வீட்டு, தொழில் கடன் வாங்க நேரிடும். அப்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். திருமண முயற்சிகளில் சுபசெய்திகள் வீடுதேடிவரும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர். எதிர்கால முன்னேற்றம் குறித்த ஆலோசனை மேற்கொள்வர். குரு,சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நன்மையும் தீமையும் கலந்திருக்கும். நன்கு பழகியவர்களே எதிரிகளாக மாறுவதற்கு இடமுண்டு. உறவினர்கள் விஷயத்திலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும். கடந்தகாலத்தில் தந்தையுடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்டு வந்த உயர்கல்வியை மேற்கொள்ள வழிபிறக்கும். சிலர் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்வர். சிலருக்கு படித்துக் கொண்டே வேலைவாய்ப்பும் கிடைப்பதற்கு யோகமுண்டு.தொழிலில் நல்ல வளர்ச்சியும், அமோக லாபமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைத்திடும். பணிச்சுமை பெரும்பங்கு குறையும். வெளியூர் பயணத்தால் நல்ல அனுபவம் உண்டாகும். விரய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது பிரச்னைகளை உண்டாக்கினாலும், சனி, குரு இருவரும் நன்மை செய்ய காத்திருக்கின்றனர்.
தொழிலதிபர்கள்: தொழிலில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பணவசதி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைத்து, உற்பத்தி அதிகரிக்கும். சிறந்த செயல்பாடுகளால் தொழிலில் உருவாகிற போட்டியை எளிதில் சமாளிப்பீர்கள். சிலருக்கு தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்கும். திறமைமிகு பணியாளர்களை ஊக்கப்படுத்துவீர்கள். சுற்றுலா செல்வீர்கள்.
வியாபாரிகள்: வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பும் புதிய உற்சாகமும் பெறுவீர்கள். தாராள அளவில் விற்பனை நடந்து பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உருவாகும். போட்டியாக செயல்பட்டவர்கள் விலகுகிற அளவில் உங்களின் செயல்திறனும் விற்பனை நடைமுறையும் மாற்றம் பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாகி தமது வியாபாரத்தில் கூட்டுசேர அழைப்பர். அவர்கள் நம்பகமானவர்களா என அறிந்து செயல்படுவது நற்பலன்பெற உதவும். சரக்கு குடோன் அமைக்க சொந்த இடம் வாங்க யோகமுண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் பணியை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவர். வேலைகளை சீக்கிரம் முடித்து, அதிகாரிகளிடம் நற்பெயரும், கூடுதல் சலுகையும் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். தொழிற்சாலை பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்று திறம்பட பணிபுரிவர்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் எல்லாரிடமும் அன்புடன் பேசி, குடும்பத்திலும், உறவினர் இல்லங்களிலும் கலகலப்பை உருவாக்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த முக்கிய காரணமாக இருப்பீர்கள். கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவீர்கள். மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் ஆரோக்கியம், ஆயுள் பலம் பெறும். பணிபுரியும் பெண்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயரும் பெறவேண்டிய சலுகைகளும் பெறுவர். பதவி உயர்வு, இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். உற்பத்தி, விற்பனை அதிகரித்து ஆதாய பணவரவை பெற்றுத்தரும். பணவசதிக்கேற்ப தங்க நகை வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும்.
மாணவர்கள்: எதிர்கால திட்டங்களை மனதில் கொண்டு படிப்பில் அதிக கவனமுடன் ஈடுபடுவீர்கள். மார்க் அதிகரித்து மனதில்நம்பிக்கை பிறக்கும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். தனித்திறமைகளை வளர்ப்பதில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். சக மாணவர்கள் அன்பு பாராட்டி படிப்பில் உறுதுணையாக நடந்துகொள்வர். பெற்றோரின் அன்பு, பாசம் கிடைக்கும். படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் துவங்க முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த நாட்களில் இருந்த மனக்குழப்பம் மாறும். பணவசதி திருப்திகரமாக அமைந்து மனதுக்கு மகிழ்ச்சி தரும். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமான அளவில் கிடைக்கும். எதிர்மனப்பாங்குடன் உங்களிடம் பேசிய சிலர், மனம் திருந்தி விடுவர். இருப்பினும், அவர்களிடம் நிதானித்து பழகுவது நல்லது. அரசியல் பணிக்கு புத்திரர்களின் பங்களிப்பு சுமாரான அளவில் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள், தாராள பணவசதி கிடைத்து விவசாயப்பணியில் ஈடுபாடு கொள்வீர்கள். மகசூல் அதிகரித்து பயிர்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புதியநிலம் வாங்க யோகம் உண்டு. குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை விமரிசையாக நடத்துவீர்கள்.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வணங்குவதால் பணவரவு பலமடங்கு பெருகும்.
பரிகாரப் பாடல்:
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின் தாளை வையே!