உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம்: நம்ப முடியாது உங்களை வெல்ல முடியாது!

சிம்மம்: நம்ப முடியாது உங்களை வெல்ல முடியாது!

குடும்ப பெருமையை நிலைநாட்டும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் லாப ஸ்தானமான பதினோராம் இடத்திற்குச் செல்கிறார். அவரின் பார்வை 3,5,7ம் இடங்களில் படுவதால் நன்மை உண்டாகும். 3ம் இடத்தில் இருக்கும் சனியின் பார்வை 5,9,12ம் ராசிகளில் பதிகிறது. பெரு பதினொன்றைந் தேழ் பேர்ஒன்பதாம் இரண்டில் தேவகுரு வரில் செல்வம் சிரூர் குதிரை வெண்குடை தீவர்த்தி தருமமும் தானமுண்டு தாய்தந்தை துணையும் உண்டாம் அருமையும் பெருமையுண்டாம் அரசர் சேவையும் உண்டாமே!என்கிறது ஒரு வெண்பா. இதன்படி, நம் வாழ்விலா இப்படி நடக்கிறது என உங்களாலேயே நம்ப முடியாத பலன்கள் நடக்கும். உங்களை யாரும் வெல்ல முடியாது. கடந்தகாலத்தில் சிரமம் கொடுத்து வந்த நோய்நொடி அனைத்தும் விலகி ஆரோக்கியம் மேம்படும். உள்ளத்திலும் புத்துணர்ச்சி மேலோங்கும். குருவருளால் இந்த ஓராண்டும் பொற்காலமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. பணவரவு தடையின்றி கிடைக்கும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அதற்காக அளவுக்கு மீறி வாக்கு கொடுப்பது கூடாது. மனதில் தைரியம் ஊற்றெடுக்கும். இளைய சகோதரர் வாழ்வு உயரும். சகோதரர்களின் பாசமழையில் நனைவீர்கள். அவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நிலை சீர்பெறும். தாயிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். வீட்டிற்குத் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். சிலருக்கு புதியவீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனை, வேண்டுதல் கூட எளிதாக நிறைவேற்றும் வாய்ப்பு அமையும்.தடைபட்டு வந்த திருமண முயற்சி இனிதே நிறைவேறும். சுபநிகழ்ச்சிக்கு உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கருத்துவேறுபாடு மறைவதோடு தம்பதிக்கு இடையே அன்பு மேலோங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு இனிய தருணம் இதுவாகும். வீட்டில் மழலைக்குரல் கேட்கும் காலம் நெருங்கிவிட்டது. பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு விஷயத்தில் எதிர்கால வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அலைச்சலால் அடிக்கடி அசதிக்கு ஆளாவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை செலுத்தி உடல்நலத்தைப் பேணுவீர்கள். கடன் பிரச்னையைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். ஓரளவு அடைபடவும் வாய்ப்புண்டு. பகைவர் கூட நண்பராக மாறும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியும் அவ்வப்போது கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.தந்தையின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. அவருக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். சுயதொழில் புரிவோருக்கு அரசுவகையில் ஆதாயம் உண்டு.

தொழிலதிபர்கள்: உங்களின் தொழில் வளர்ச்சிக்கான அத்தனை முயற்சிகளும் முழு அளவிலான வெற்றியைத்தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து உற்பத்தியின் அளவை அதிகரிப்பீர்கள். லாபம் நன்றாக இருக்கும். நவீன இயந்திரங்களை வாங்குவீர்கள். சக தொழில் சார்ந்தவர் உங்களின் நட்பை பெரிதும் விரும்புவர். தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்கும். புத்திரர்கள் நிர்வாகப்பணிகளில் தகுந்த பயிற்சி பெற்று உதவிகரமாக நடந்து கொள்வர்.

வியாபாரிகள்: அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை திறம்பட நடத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பலமாக கிடைக்கும். விற்பனை அதிகரித்து தாராள பணவரவு பெறுவீர்கள். வாடகை கட்டடத்தில் நிறுவனம் நடத்துபவர் சொந்த இடம் வாங்கி நடத்த அனுகூலம் உண்டு. சக தொழில் சார்ந்தவர் உதவிகரமாக நடந்துகொள்வர். புத்திரர்கள் உங்களின் வியாபார நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவர தகுந்த திட்டங்களை உருவாக்கித்தருவர்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணித்திறமையை நன்கு பயன்படுத்தி குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு பெறுகிற தகுதி உள்ளவர்களுக்கு அனுகூலம் எளிதில் கிடைக்கும். சலுகைகளும் திருப்திகரமாக வந்து சேரும். வீடு, வாகனம் வாங்குவதற்கான பணக்கடன் இனிய அணுகுமுறையால் பெறுவீர்கள். தனியார் துறை பணியாளர்களுக்கு ஓவர்டைம் உள்ளிட்ட சலுகைகள், பயிற்சி பெற வெளிநாடு, வெளிமாநிலம் செல்லுதல் ஆகிய அனுகூலங்கள் உண்டு. சக பணியாளர்களுடன் சுமூக உறவு இருக்கும்.

பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின்  கருத்துக்களை மதிப்புடன் ஏற்று நடந்து கொள்வர். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணவசதி திருப்திகரமாக இருக்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு பணியை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள், பதவி உயர்வு கிடைக்கும். தங்க நகை வாங்குவீர்கள். சுயதொழில் புரியம் பெண்கள் தாராள பணவசதி கிடைத்து உற்பத்தி, விற்பனையில் அபிவிருத்தி காண்பர். நவீன தொழிற்கருவிகள் வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி இனிதாக நிறைவேறும்.

மாணவர்கள்: லட்சிய மனதுடன் படித்து படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவீர்கள். தனித்திறன் வளர்த்து புகழ் பெறுவீர்கள். பெற்றோர் அதிக அன்பு, பாசத்துடன் தேவையான உதவிகளை வழங்குவர். ஆன்மிக நம்பிக்கை மனதில் வளர்ந்து தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்வீர்கள். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக செயல்படுவர். சுற்றுலா செல்ல அனுகூலம் உண்டு. படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு கவுரவமான சம்பளத்தில் பணி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: புகழும் அந்தஸ்தும்  பெறுவீர்கள். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைக்கும். எதிரிகள் விலகுகிற அளவில் உங்கள் செயல்பாடுகள் அமையும். புத்திரர்கள் உங்கள் அரசியல் பணிக்கு நல்லமுறையில்  உதவுவர். கவுரவமான பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பயிர் வளர்க்க தேவையான அத்தனை வசதிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் அதிகரித்து பயிர்களுக்கு நல்ல விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் உபரி பணவரவும் உண்டு. புதிய நிலம் வாங்க அனுகூலம் உருவாகும்.

பரிகாரம்:ராமபிரானை வணங்குவதால் உங்கள் வாழ்வு மேலும் வளம் பெறும்.

பரிகாரப் பாடல்:
சுற்றமெல்லாம் பின்தொடர
தொல்கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும்
கணபுரத்தெண் கருமணியே!
சிற்றவை தன் சொற்கொண்ட
சீராமா தாலேலே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !