இயற்கை சூழலுடன் சப்தகன்னியம்மன் கோவில்!
திருத்தணி: இயற்கை சூழலுடன் உள்ள சப்தகன்னியம்மன் கோவிலில், கோடை காலத்திலும் வற்றாமல் வரும் சுனை நீர், தாழம்பூ தோப்பு மற்றும் விளையாட்டு பூங்கா ஆகியவை உள்ளதால், அதிகளவில் பக்தர்கள் வந்து பக்தி பரசவத்துடன் தரிசிக்கின்றனர். திருத்தணி - கன்னிகாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சப்தகன்னியம்மன் கோவில். இக்கோவில், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவில் ஆகும். மேலும், முருகன் கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. 20 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள, இக்கோவிலை சுற்றியும் சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டு பூங்கா ஒன்று அமைத்தும் பராமரித்து வருகிறது. கோவில் வளாகத்தில் உயர்ந்து அடர்ந்த பசுமையான மரக் கூட்டங்களுக்கு இடையே சப்த கன்னியர் (ஏழு கன்னிகள்) உள்ளனர். இங்கு, 100 ஆண்டுகளுக்கு மேலாக மரங்கள் உள்ளன. கோடைக் காலத்திலும் வெயில் தெரியாமல் குளு, குளுவென காற்று வீசுவதால், அதிகளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். மேலும், இக்கோவிலுக்கு வரும் சுனைநீர் கோடை காலத்திலும் வற்றாமல் வருகிறது. இந்த நீரில், சிலர் பொங்கல் வைத்தும், குடிநீராகவும் தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர, இங்கு தாழம்பூ தோப்பும் உள்ளதால் நறுமணம் வீசுகிறது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்து காதணி விழா மற்றும் பொங்கல் வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர். இங்கு ஆடு,கோழிகளை நேர்த்திக் கடனாக பலியிடப்படுகிறது. சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்குமேடை போன்ற உபகரணங்கள் உள்ளதாலும், பார்ப்பதற்கு இயற்கை தோற்றுத்துடன் காணப்படுவதால், கோடைக் காலத்தில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் காலை முதல், மாலை வரை குவிந்திருப்பர். இப்படி, இயற்கை சூழலுடன் உள்ள கோவில் வளாகத்தில், பக்தர்கள் அமர்வதற்கு மேடை, பாதுகாப்பு வசதிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், ""கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும் என்றார்.