கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பு
ஊத்துக்கோட்டை: கரியமாணிக்க பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்த உற்சவரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது கமலவல்லிநாயிகா உடனுறை கரியமாணிக்க பெருமாள் கோவில். இந்தாண்டு, கடந்த, 21ம் தேதி மாலை, 4:30 மணிக்கு அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், புஷ்ப பல்லக்கு, சேஷ வாகனம், சந்திரபிரபை, பல்லக்கு, கருடசேவை, அனுமந்த வாகனம் ஆகியவற்றில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய விழாவான நேற்று தேர்த் திருவிழா நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து, ஒவ்வொரு வீதியாக இழுத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டின் முன் சுவாமி வந்தபோது, பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர். இன்று, மாலை சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.