பாரம்பரியமிக்க ஆழ்வார்திருநகரி கோயில் தெப்பக்குளத்தை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு
பாரம்பரியமிக்க ஆழ்வார்திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயில் தெப்பக்குளத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளம் திருச்செந்தூர்- திருநெல்வேலி ரோட்டில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளம் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் அகற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெப்பக்குளத்தை அகற்ற வேண்டும். இதுதொடர்பாக ஆட்சேபனை இருப்பின் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., அலுவகத்தில் வரும் 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்க கடிதத்துடன் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் எதிர்ப்பு: ஆழ்வார்திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு பாத்திப்பட்ட தெப்பக்குளத்தை அகற்றுவது மிகவும் வேதனையளிப்பதாக பக்தர்கள் மனம் குமுறுகின்றனர். கோயிலில் மாசி மாதம் நடக்கும் திருவிழா மிகவும் சிறப்பானதாகும். அப்போது கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் இரண்டு நாள் தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். தற்போது தெப்பக்குளத்தை அகற்றி விட்டால் தெப்பத்திருவிழா நடத்தப்படுவது தடைபடும். ஆண்டாண்டு காலமாக ஆழ்வார்திருநகரி கோயில் சார்பில் தெப்பத்திருவிழா திடீரென நிறுத்தப்பட்டால், கடவுள் குற்றமாகி விடாதா என்றும் பக்தர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். போக்குவரத்திற்காக ரோட்டை அகலப்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதை விட்டு விட்டு பக்தர்கள் மனம் நோகச்செய்யும் வகையில் தெப்பக்குளத்தை அகற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் முடிவை மாற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். -நமது சிறப்பு நிருபர்-