உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் சொத்துக்கள் விஷயத்தில் அறநிலைய துறை எச்சரிக்கை!

கோவில் சொத்துக்கள் விஷயத்தில் அறநிலைய துறை எச்சரிக்கை!

காஞ்சிபுரம்: கோவில்களுக்கு சொந்தமான கடைகள், நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள், அவற்றை "அடிமனை நீங்கல் என்ற வகையில் முறைகேடாக மற்றவர்களுக்கு மறு குத்தகைக்கு விட்டாலோ, விற்பனை செய்தாலோ அவர்களின் குத்தகை ரத்து செய்யப்படும் என, அறநிலையத் துறை எச்சரித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,386 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், 2 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை என, 4,545 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை தவிர, பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.7,300 குத்தகைதாரர்கள்கோவிலுக்கு, சொந்தமான கடைகள் மற்றும் காலி மனைகளை 7,300 க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் எடுத்துள்ளனர். குத்தகை எடுத்தவர்கள் அவர்களது குத்தகை காலம் மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை கோவில் நிர்வாகத்தில் புதுப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும், அன்றைய சந்தை நிலவரப்படி, குத்தகை தொகையை நிர்ணயம் செய்து, செயல் அலுவலர், இணை ஆணையருக்கு பரிந்துரை செய்வார். இணை ஆணையர் குத்தகை காலத்தை நீட்டித்து கோவில் நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பிப்பார். இது, சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு தெரிவிக்கப்பட்டு, நீடிக்கப்பட்ட குத்தகை உரிமம் வழங்கப்படும்.முறைகேடாக விற்பனைஇந்நிலையில், கோவில் கடையை குத்தகை எடுத்தவர்கள், தங்களின் பணத்தேவைக்காக, மறு குத்தகைக்கு விட்டு விடுகின்றனர். காலிமனை வைத்திருக்கும் சில குத்தகைதாரர்கள், அவர்கள் வசித்துவரும் இடத்தை, அடி மனை நீங்கலாக வேறு ஒருவருக்கு 20 ரூபாய் முத்திரைத்தாளில், குத்தகையாகவோ, கிரையமாகவோ விற்று விடுகின்றனர்.

இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ""கோவிலுக்கு சொந்தமான வீட்டுமனை மற்றும் காலிமனையை சிலர், "அடிமனை நீங்கல் என்ற வகையில், முறைகேடாக, வேறு ஒருவருக்கு மாற்றி விடுகின்றனர். கோவில் சொத்தை விலைக்கு வாங்கியவர்களும் முறையாக குத்தகை கட்டணம் செலுத்துவதில்லை, என்றார்.மேலும், ""கோவில் நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கிய பின்னரே, விலைக்கு வாங்கியவர்கள் பணம் செலுத்துவதற்கு கோவில் அலுவலகத்திற்கு வருகின்றனர். இதனால், கோவில் சொத்துகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை மற்றும் குத்தகை பாக்கி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றார்.எச்சரிக்கைஇதுகுறித்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசந்தரம் கூறுகையில், ""அரச உத்தரவின்படி, கோவில் நிலங்களுக்கு குத்தகை தாரர்கள் உரிமை கோர முடியாது. இதுதவிர, கோவில் நிலத்தை வைத்திருக்கும் குத்தகைதாரர் வேறு நபருக்கு மறுவாடகைக்கு விட்டுள்ளது, விற்பனை செய்திருப்பது தெரியவந்தால், அவர்களின் குத்தகையை ரத்து செய்ய, இணை ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.ஏகப்பட்ட பாக்கி!தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. இந்த, கோவில்களுக்கு சொந்தமான ஒரு லட்சத்து 83,669 ஏக்கர் விளை நிலங்கள், 2,18,226 ஏக்கர் தரிச நிலங்கள், 20,746 ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இவற்றை குத்தகைக்கு எடுப்பவர்கள், கோவில் நிர்வாகத்திற்கு, தங்களின் வசதிக்கு ஏற்றவாறு மாதம் மற்றும் ஆண்டுதோறும், குத்தகை கட்டணத்தை, வகைப்படுத்தி செலுத்த வேண்டும். இந்த நடைமுறையை, பெரும்பாலான குத்தகைதாரர்கள் கடைப்பிடிப்பதில்லை. குத்தகை முடியும் தருவாயில் கட்டிக் கொள்ளலாம் என, மெத்தனமாக இருக்கின்றனர். இதனால், ஒவ்வொரு கோவிலுக்கும் பல லட்சம் ரூபாய் குத்தகை பாக்கி வசூலாக வேண்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !