கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான கோவில்!
சென்னை: தென் மாவட்ட மக்கள், திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, கன்னியாகுமரி, விவேகானந்தபுரத்தில், வெங்கடேஸ்வரா கோவில் அமைய உள்ளது, என, திருப்பதி தேவஸ்தானத்தின், சென்னை ஆலோசனை குழும தலைவர், ஆனந்த்குமார் ரெட்டி கூறினார். அவர் கூறியதாவது: தென் மாவட்ட மக்கள், பல மணி நேரம் காத்திருந்து, திருப்பதி வெங்கடேச பெருமாளை, தரிசித்து வருகின்றனர். அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், விரைவில் தரிசிக்க வேண்டும் என்பதற்காகவும், கன்னியாகுமரி, விவேகானந்தபுரத்தில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் அமைய உள்ளது. விவேகானந்தபுரத்தில் உள்ள, விவேகானந்த கேந்திரம், இக்கோவிலுக்கு, 5.30 ஏக்கரை வழங்கிஉள்ளது. கோவிலின் கட்டுமான செலவுகளுக்கு தேவைப்படும், 2.50 கோடி ரூபாயை, திருப்பதி தேவஸ்தானம் வழங்குகிறது. திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம விதிப்படி, இக்கோவில் அமையும். மேலும், திருப்பதியில் தயாரிக்கப்படுவதைப் போல், இக்கோவிலிலும் பிரசாதம் தயாரிக்கப்படும். அடிக்கல் நாட்டு விழா, வரும், 4ம் தேதி, கன்னியாகுமரியில் உள்ள, விவேகானந்தபுரத்தில் நடக்கிறது. இவ்வாறு, ஆனந்த்குமார் ரெட்டி கூறினார்.