உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் ஆனித்திருவிழா: தேர்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நெல்லையப்பர் ஆனித்திருவிழா: தேர்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று துவங்குகிறது. விழாவை முன்னிட்டு 5 தேர்களை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது. நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று (14ம் தேதி) காலை 7.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஆனித்திருவிழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களை சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. தீயணைப்பு படையினர் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மூலம் தேர்களை சுத்தம் செய்கின்றனர். தேரில் அலங்கார வேலைப்பாடுகள் செய்வதற்காக மரக்கட்டைகளை  பொருத்தும் பணிகளும் நடந்துவருகிறது.

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா நாட்களில் சிறப்பு மேளம், நாதஸ்வர இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1ம் திருநாள் மற்றும் 2ம் திருநாளில் டி.எஸ்.சரவணன், இசக்கிராஜா நாதஸ்வ இசையும், 3ம் திருநாளில் சுப்பிரமணியன், ராமன் நாதஸ்வர இசையும், 4ம் திருநாளில் மலேசியா செல்லப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 5ம் திருநாளில் மணிகண்டன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 6ம் திருநாளில் டி.என்.பி.ராஜா ரமேஷ், டி.என்.பி.நம்பி நடராஜன் குழுவினரின் நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சியும், 7ம் திருநாளில் நெல்லை விஸ்வநாதன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், 8ம் திருநாளில் நெல்லை மாநகர மங்கள இசை கலைஞர்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந் நிகழ்ச்சியை ஆர்.எஸ்.மணிகண்டன், செல்லப்பா குழுவினரின் ஒருங்கிணைக்கின்றனர். ஆனித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு திருமலை பக்தி சொற்பொழிவு, 6 மணிக்கு தச்சநல்லூர் கலைமகள் இசைக்குழுவினரின் பூலோக கைலாசம் எனும் இசை நிகழ்ச்சி மற்றும் கோலாட்டம் நடக்கிறது. நிகழ்ச்சிகளை விஜயலெட்சுமி ரவிச்சந்திரன் வழங்குகின்றனர். 8 மணிக்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவன் என்ற தலைப்பில் தேச மங்கையர்கரசி பக்தி சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !