சபரிமலையில் புஷ்பாஞ்சலி அவிநாசியிலிருந்து பூக்கள் பயணம்!
அவிநாசி: அவிநாசியில் உள்ள ஸ்ரீசபரி சாஸ்தா அறக்கட்டளை சார்பில், சபரிமலையில் இன்று அஷ்டாபிஷேகம், புஷ்பாஞ்சலி, படிபூஜை மற்றும் அன்னதானம் ஆகியன நடக்கின்றன. இந்நிகழ்ச்சிக்காக, அவிநாசியில் இருந்து, ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகை பூக்கள், சபரிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மலர் வியாபாரி பாபு கூறுகையில், ""சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிப்பதற்காக ஏலக்காய், திராட்சை, கறுப்பு தாமரை வேர் ஆகியவற்றால் ஆன மாலை மற்றும் கிரீடங்கள் தயாரித்து அனுப்பியுள்ளோம். ஒரு டன் எடையுள்ள துளசி, வில்வம், விருட்சிப்பூ, சம்பங்கி, மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகம், மனோரஞ்சிதம், கதிரி பச்சை, சிவக்கொழுந்து, சாமந்தி, 12 வகை ரோஜா, ஐந்து வகை அரளி, தாழம்பூ உள்ளிட்ட 18 வகை மலர்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர, 18 படிகளுக்கு 30 அடி நீளத்தில் 2 செட் மாலைகள் மற்றும் பிற வகை மாலைகள் தயாரிக்க, 20 தொழிலாளர்கள், சபரிமலைக்குச் சென்றுள்ளனர், என்றார்.