காரைக்காலில் 23ம் தேதி மாங்கனி திருவிழா!
காரைக்கால்: காரைக்காலில், வரும் 23ம் தேதி மாங்கனி திருவிழா நடப்பதையொட்டி, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் கோவில் உள்ளது. அம்மையாரின் கணவரிடம், சிவபெருமான் மாங்கனி கொடுத்தனுப்பி, அதை, அடியார் வேடத்தில் சிவபெருமானே வந்து சாப்பிடுவதும், இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும், அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கையால் நடந்து சென்றதாகவும் ஐதீகம். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாங்கனி திருவிழா 23ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, 21ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 22ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணம், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு, மறுநாள் 23ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதியுலா வருவதும், அப்போது பக்தர்கள் மாங்கனி வீசும் வைபமும் நடக்கிறது. மாலை, சிவபெருமானுக்கு, அம்மையார் மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கந்தூரி விழா காரைக்காலில் மற்றொரு பிரசித்தி பெற்ற விழாவான மஸ்தான் சாகீப் வலியுல்லா தர்கா ஷரிப் கந்தூரி விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. அன்று, மாலை ரதம், பல்லக்கு வீதி உலாவும், இரவு 9:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஜூன் 28ம் தேதி இரவு 10:00 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதியுலா, 11.30 மணிக்கு சந்தனக்கூடு நடக்கிறது.