மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் கோயிலில் நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தை, கோயிலில் நடத்த பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, 100 ஆண்டுகள் முந்தைய, மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. ஆனி மாத விழா 12 நாட்கள் நடைபெறும். இதை காண, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோயில் விழா, கடந்த 12 ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்தாம் நாள் விழாவாக மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெறும். இதை காண ஏராளமான பக்தர்கள் கூடுவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோயிலின் உள்திருக் கல்யாணம் நடந்தது. இது பக்தர்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக, திருக்கல்யாணத்தை அருகில் இருக்கும் கோயில் மண்டபத்தில் நடத்துகின்றனர். இதற்கு அனுமதி கட்டணமாக, பக்தர்களிடம் பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. மண்டபத்தில் 500 பேருக்கு மேல் அமர முடியாது. இதனால் டிக்கெட் வாங்கியும் பார்க்க முடியாது ஏமாற்றம் அடைந்தனர். மேலும் டிக்கெட்டை, குறிப்பிட்ட வி.ஐ.பி., க்கள் மற்றும் வேண்டியவர்களுக்கு கொடுப்பதால், அவர்கள் மட்டும் உள்ளே அமர்ந்து பார்த்து செல்கின்றனர். பக்தர்கள் அனைவரும் திருக் கல்யாணத்தை பார்க்கும் வகையில், கோயிலின் உள்ளே அல்லது கோயிலின் வெளியில் திறந்த வெளி கலையரங்கத்தில், திருக்கல்யாணத்தை நடத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.