ஜலகண்டேஸ்வரர் கோபுரத்துக்குள் பூஜை: புதையல் ஆசையில் கற்கள் தோண்டி எடுப்பு!
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியிலுள்ள, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தின் உள்பகுதியில் மர்மநபர்கள் புதையல் இருக்க கூடும் என்ற எண்ணத்தில் இரவில் பூஜை நடத்தி கற்களை தோண்டி சேதப்படுத்தியுள்ளனர். மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. 2003ல் அணை நீர்மட்டம், 25 அடிக்கும் கீழே சரிந்தபோது, நீர்பரப்பு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் முழுமையாக வெளியில் தெரிந்தது. அதன் பின் நீர்மட்டம், 50 அடிக்கு மேல் நீடித்ததால், பத்து ஆண்டாக கோபுரம் வெளியில் தெரியவில்லை. நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியால் மேட்டூர் அணை நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் முழுமையாக வெளியில் தெரிகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜலகண்டேஸ்வரர் கோபுரம், அருகிலுள்ள நந்தியை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு திரும்புகின்றனர். இந்நிலையில், கோபுரத்தின் உள்பகுதியில் புதையல் இருக்க கூடும் என்ற சந்தேகம் சிலர் மர்மநபர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் மர்மநபர்கள் கோபுரத்தின் உள்பகுதியில் புகுந்து பூஜை நடத்தி கற்களை பெயர்த்து, புதையல் தேடியுள்ளதாக தெரிகிறது. கோபுரத்தின் உள்பகுதியில் பூஜை நடத்தியதற்கு அடையாளமாக அப்பகுதியில் குங்குமம், பூஜை பொருட்கள் சிதறி கிடக்கிறது. கற்களும் உடைத்து பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மர்மநபர்கள் கோபுரத்தின் உள்பகுதி கற்களை பெயர்த்து, புதையல் தேடிய சம்பவம் அணை கரையோர கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.