ஆலங்குடி கோவிலுக்கு தேர்: பூஜையுடன் பணி துவக்கம்!
திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், திருத்தேர் செய்யும் பணி துவங்கியது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் தேவாரப்பாடல் பெற்றது. இக்கோவில், குரு பரிகாதர தலமாகவும் விளங்குகிறது. இங்கு, இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர், குருவிற்கு அர்ச்சனை செய்கின்றனர். சித்திரை பெருவிழாவில், உற்சவ தட்சிணாமூர்த்தி. தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதற்கென, தனித்தேர் இல்லாததால், கட்டுத்தேரில், உற்சவ தட்சிணாமூர்த்தியை, எழுந்தளிருளச் செய்கின்றனர். கோவிலுக்கு தேர் செய்ய, அறநிலைத்துறை, 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதத அடுத்து, பணிகள் துவங்கியது. இதற்கான பூதம்பர் பூஜை நேற்று நடந்தது. ஜோதி ராமலிங்க சிவாச்சாரியார், பூஜையை நடத்தி வைத்தார். தேர் செய்யும் பணி நான்கு மாதங்களில் நிறைவு பெறும். புதியதாக வடிவமைக்கப்படும் தேரில் வினாயகர், சிவன், அம்பாள், குருபகவான், நாயன்மார்கள், திருமேனிகள் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இடம் பெற உள்ளன. தேருக்கான நான்கு சக்கரங்கள், திருச்சி "பெல் நிறுவனத்தில், "பிரேக் வசதியுடன் தயாரிக்கப்படுகிறது.