உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க திட்டமா?

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க திட்டமா?

புதுடில்லி: அமர்நாத் யாத்திரையை, சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

குகைக் கோவில்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள, குகை கோவிலான அமர்நாத்துக்கு, பக்தர்கள் யாத்திரை செல்வது, வரும், 28ம் தேதி துவங்குகிறது. இந்த யாத்திரை இரண்டு மாதங்கள் நடைபெறும். பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ளும் பகுதி முழுவதும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தலுள்ள பகுதிகளாக உள்ளன.எனவே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு, கடந்த வாரம் பாதுகாப்பு அமைப்புகளுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது. இது தொடர்பாக, ஜம்மு - காஷ்மீர் மாநில உள்துறை, வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறியிருந்த தாவது:அமர்நாத் கோவிலுக்கு, யாத்திரையாக பக்தர்கள் செல்லும் வழி முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடிய பகுதிகளாக உள்ளன. இந்த யாத்திரை துவங்கியபின், மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு நிலைமை, நாடு முழுவதும் உற்று நோக்கப்படும். எனவே, இந்த யாத்திரையில் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு அமைப்புகள், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுளை செய்து வருகின்றன. யாத்திரை செல்லும் பகுதி முழுவதும், ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிக்கவும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான முகாம்களில், குளோஸ்டு சர்க்கியூட் கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய ஆயுத படைப்பிரிவின், டி.ஜி.பி., பிரணாய் சகாய் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதாவது:அமர்நாத் யாத்திரைக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இருப்பினும், யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. பாதுகாப்புக்கு கூடுதல் படைகள் அனுப்பப்படும். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.ராணுவத்தின் வடக்கு மண்டல தலைமை அதிகாரி, கே.டி.பர்நாயக் கூறுகையில், ""அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு துறையினர் மூலம் தகவல் கிடைத்துள்ளது, என்றார்.

அதிகரிப்பு: ஆண்டுதோறும் நடக்கும் அமர்நாத் யாத்திரைக்கு, பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முன், 2000 ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை நடந்த யாத்திரையின் போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 36 பக்தர்கள் உட்பட, 48 பேர் பலியாகி உள்ளனர். இதையும் பொருட்படுத்தாமல், திரளான பக்தர்கள், பங்கெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், யாத்திரை துவங்குவதற்கு முன்பாக, ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, யாத்திரைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, முன்னெச்சரிக்கை என்ற பெயரில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !