உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் கோவில் தேரோட்டத்தில் கடையாணி உடைந்ததால் பரபரப்பு

மூலநாதர் கோவில் தேரோட்டத்தில் கடையாணி உடைந்ததால் பரபரப்பு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் தேரோட்டத்தின்போது, முன் சக்கரத்தின் கடையாணி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகூரில், 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக் கோவிலில், தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. அப்போது, தேரில் உள்ள விலை மதிப்பற்ற மரச் சிற்பங்களான கெஜலட்சுமி, துவார பாலகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சிற்பங்கள் ஒவ்வொன்றாக தனித் தனியே கழன்று சாலையில் விழுந்தன. ஆனாலும், தேர் தொடர்ந்து மாட வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டது. மாலை 5.00 மணிக்கு மேற்கு வீதி வழியாக தேர் வலம் வந்த போது, தேரின் முன்பக்க சக்கரத்தின் கடையாணி உடைந்து விழுந்தது. இதனால், தேர் குடைசாயும் நிலை ஏற்பட்டது. உடனே தேர் வீதியுலா பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, புதிய கடையாணி செய்யப்பட்டு, அதனை சக்கரத்தில் பொருத்தி மீண்டும் தேர் இழுத்து வரப்பட்டு, இரவு 8.00 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரின் கடையாணி உடைந்தவுடன் தேர் வீதியுலா நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நிதி ஒதுக்கப்படுமா?: தேர் பலவீனமானதால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புதிய தேர் செய்யும் பணி துவங்கியது. இதற்காக உயர் ரக மரக் கட்டைகள் வாங்கப்பட்டன. ஆனால், தேர் செய்யும் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படாததால், புதிய தேர் செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டைகள் மழையிலும், வெயிலிலும் மக்கி வீணாகி வருகின்றன. கோவிலுக்கு புதிய தேர் செய்ய நிதி ஒதுக்கி, பணியை உடனே துவங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !